Saturday, 11 October 2008

காவிரித்தாய் துள்ளிக்குதிக்கும் ஒகேனக்கல்


காவிரித்தாய் துள்ளிக்குதிக்கும் ஒகேனக்கல்
ர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தவழ்ந்து வந்து அருவியாக...பேரருவியாக கொட்டும் இடம்தான் ஒகேனக்கல். கர்நாடக- தமிழக எல்லையில் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. கொஞ்சம் கவித்துவமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தை எட்டிப்பார்த்து விட்ட காவிரித்தாய், அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக்குதிக்கும் இடம் ஒகேனக்கல். ஹோ...என்ற பேரிரைச்சலுடன் கொட்டும் அருவியை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பெயர்க்காரணம்:
கன்னடத்தில் ஹொகே என்றால் புகை என்பது பொருள். கல் என்றால் பாறை. காவிரி ஆறு சுமார் 20மீட்டர் உயரத்தில் இருந்து பாறையில் அருவியாக விழுந்து வெண்மையான புகைமண்டலத்தை ஏற்படுத்துவதால் ஹொகேனக்கல் என அழைத்துள்ளனர். பின்னர் பெயர் மருவி ஒகேனக்கல் ஆகி விட்டதாக வரலாறு. கடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.
அருவியில் ஆண்கள் பெண்கள் குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. சூடு பறக்க எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் ஆனந்தமாக குளித்து வந்ததும் அங்கு சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கும் பொரித்த ஆற்றுமீன்களை ருசிப்பது வேறு எங்கும் கிடைக்காத (சுவையான) அனுபவம்.
இதே போல பெரிய குன்றுகளுக்கு இடையில் அமைதியாக ஓடும் ஆற்று நீரில் பரிசலில் சவாரி செல்வது மனதை மகிழ்ச்சிப்படுத்தும். இது மட்டுமின்றி இங்குள்ள சிறுவர் பூங்கா, உயிரியல் பூங்கா போன்றவற்றில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். முதலைப்பண்ணைக்கு சென்று பிரம்மித்து திரும்பலாம்.
விவசாயத்தின் ஆதாரமாக விளங்கும் காவிரிக்கு இங்குள்ள மக்கள் ஆடி 18ல் ஆடிப்பெருக்கு விழாவில் விழா எடுத்து நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகிறார்கள் அன்றைய தினம் புதுமணத் தம்பதியர் காவிரி ஆற்றில் நீராடினால் எல்லா வளமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. பொங்கலுக்கு மறுநாள் காணும்பொங்கல் தினத்திலும் இங்கு மக்கள் திரண்டு வருகிறார்கள்.
தீர்த்த மலை:
தர்மபுரி மாவட்டத்தில் ரசிக்க ஒகேனக்கல் என்றால் தரிசிக்க பிரசித்தி பெற்ற பழமையான தீர்த்தமலை கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரராக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். இந்தக்கோவிலில் விஜயநகர மற்றும் சோழ மன்னர்களை பற்றிய குறிப்புகள் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் காணப்படுகின்றன. அருணகிரி நாதர் பாடல்களிலும் தீர்த்தகிரீஸ்வரர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் சிறப்புக்கு சான்றாகும். மார்ச் மாதம் இங்கு நடைபெறும் ஒன்பது நாள் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
அதியமான் கோட்டை:
தர்மபுரியில் இருந்து சுமார் 7கி.மீ தொலைவில் உள்ளது அதியமான் கோட்டை. இது அந்தக்காலத்தில் அதியமான்களின் தலைநகராக விளங்கியது. இங்குள்ள சென்றாய பெருமாள் கோவில் கிருஷ்ண தேவராயர் மற்றும் ஹெசேல மன்னர்களால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
சுப்பிரமணிய சிவா நினைவிடம்:
நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட சுப்பிரமணிய சிவாவின் நினைவிடம் மற்றும் சமாதி தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பக்கம் உள்ள பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ளது. சுப்பிரமணிய சிவா தனது இறுதிக்காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாக இருந்தபோது பாப்பாரப்பட்டியில் இருந்துதான் செயல்பட்டுள்ளார். அதன் நினைவாகவே அவருக்கு இங்கு நினைவகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சென்று வருவது சுதந்திரத்துக்காக பாடுபட்ட பெரும் போராளி ஒருவருக்கு மரியாதை செலுத்தி வந்த திருப்தியைத் தரும்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:
உணவு விஷயங்களைப் பொறுத்தவரை ஒகேனக்கல் அருவிக்கு செல்லும்போது உணவை கையோடு கொண்டு சென்று விடுவது நல்லது. ஒகேனக்கல் அருகே உள்ள பென்னகரத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. தர்மபுரியில் தனியார் விடுதிகள் உள்ளன. ஒகேனக்கல்லுக்கு சாலை மார்க்கமாக பெங்களூரில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாகவும் வந்து விடலாம். பயணதூரம் 150 கி.மீ. ஆகும். சென்னையில் இருந்து தர்மபுரி சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ளது. தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் 46 கி.மீ. தர்மபுரி வரை சாலை வசதி சிறப்பாக இருக்கும். தர்மபுரியில் ரயில் நிலையமும் உள்ளது.
"ஒகேனக்கல்லில் காவிரித்தாய் துள்ளிக்குதிக்கும் அழகை ரசிக்க யாருக்குத்தான் மனசு வராது?

இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?"

No comments: