Saturday, 11 October 2008

என்றும் குமாரி கன்னியாகுமரி


11.06.08 என்றும் குமாரி கன்னியாகுமரி
ந்தியாவின் தென்கோடியில் அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல்கள் சங்கமிக்கும் சிறப்பான இடம் கன்னியாகுமரி. இங்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பது அலைகள் மட்டுமல்ல. அசர வைக்கும் கலைகளும்தான். நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் நிகழும் சூரிய உதயமும் அஸ்தமனமும் கன்னியாகுமரிக்கு இயற்கை தந்த அபூர்வ பரிசாகும். இதே போல இன்னும் பல அபூர்வங்களும் ஆச்சரியங்களும் கன்னியாகுமரியில் நிறையவே உண்டு.

திருவள்ளுவர் சிலை:

உலகப்பொதுமறையாக உயர்ந்து நிற்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் முழு உருவச்சிலை 133 அடி உயரத்தில் கன்னியாகுமரி கடலுக்கு நடுவே பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது. குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் வள்ளுவரின் சிலையை வடிவமைத்து உள்ளனர். இதில் பீடம் 38 அடியாகவும் (அறத்துப்பாலில் 38 அதிகாரங்களை குறிக்கும் வகையில்), சிலை 95 அடியாகவும் (பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் 95 அதிகாரங் களை குறிக்கும் வகையில்) மொத்தம் 133 அடி உயரத்தில் சிலை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள பீடம் அலங்கார மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் உள்ளே சென்று இங்குள்ள 140 படிகளில் ஏறி மேலே சென்றால் திருவள்ளுவர் சிலையின் கால்பகுதியை அடைந்து விடலாம். வள்ளுவர் சிலையின் காலடியில் நின்று கடல் அழகை ரசிப்பது பரவசப்படுத்தும் புதிய அனுபவமே. கரையில் இருந்து சமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகுப்போக்குவரத்து உண்டு.

விவேகானந்தர் பாறை:

கன்னியாகுமரிக்கு சிறப்பு சேர்ப்பதில் மற்றொன்று சுவாமி விவேகானந்தர் பாறை. விவேகானந்தர் இங்குள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்ததன் நினைவாக தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நிலவும் அமைதியான சூழலில் தியானம் செய்வது மனதிற்கு புத்துணர்வு அளிக்கும். கடற்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் பாறை அமைந்துள்ளது. படகு போக்குவரத்து உள்ளது.

காந்தி நினைவு மண்டபம்:

இந்த மண்டபம் காந்தியடிகள் நினைவாக மட்டுமின்றி நவீன கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி, இங்கு வைக்கப்பட்டிருக்கும் காந்தியடிகள் அஸ்தி மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டிடத்தை வடிவமைத்து இருப்பது பெரும் ஆச்சரியம். இந்தக்காட்சியை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் ஆச்சரியப்படுகின்றனர்.

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சி:

சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமன காட்சிகள் ஒரே இடத்தில் தெரிவது மிகவும் அபூர்வம். ஆனால் இந்த இரண்டு காட்சிகளையும் கன்னியாகுமரியில் கண்டு ரசிக்கலாம். ஆண்டுதோறும் எல்லா நாட்களிலும் சூரிய உதயத்தை வங்காள விரிகுடா கடலில் காணலாம். சூரியன் அஸ்தமன காட்சியை ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்கள் தவிர மற்ற நாட்களில் பார்த்து ரசிக்கலாம்.

குமரியம்மன் கோவில்:

கடற்கரையில் அமைந்துள்ள குமரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த அம்மனின் வைர மூக்குத்தி மிகவும் பிரகாசமானது என்றும், கடல் வழியாக வருபவர்களுக்கு இந்த வைரமூக்குத்தியின் வெளிச்சம் வழிகாட்டியது என்றும் ஒரு வரலாறு கூறப்படுவதும் உண்டு. குமரிக்கு வருபவர்கள் குமரி அம்மனை தரிசிக்காமல் செல்வது இல்லை.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்:

கன்னியாகுமரி அருகே மண்டைக்காட்டில் உள்ள ஷ்ரீபகவதி அம்மன் கோவில் கேரள பாரம்பரியத்துடன் கட்டப்பட்ட கோவில் ஆகும். இங்கு வரும் பக்தர்கள் அரிசி மாவு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மண்டைஅப்பம் தயாரித்து அம்மனுக்கு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தீராத தலைவலி தீரவும், திருமணங்கள் கைகூடவும் வேண்டி ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் நடக்கும் 10நாள் மாசித்திருவிழா இங்கு பிரசித்தம். இந்த திருவிழாவில் மட்டும் சுமார் 10லட்சம் பக்தர்கள் கூடுகிறார்கள்.

பத்மநாபபுரம் அரண்மனை:

கன்னியாகுமரியில் இருந்து 37 கி.மீ தொலைவில் உள்ள பத்மநாபபுரம் 1798ம் ஆண்டு வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்து வந்தது. இங்குள்ள அரண்மனைக்குள் அரசர்கள் பயன்படுத்திய பொருட்கள், போர்க்கருவிகள் உள்ளன. இவை அந்தக்காலத்தை நம் கண்முன் வந்து நிறுத்துகிறது.

முட்டம் கடற்கரை:

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் உள்ள முட்டம், எழில் கொஞ்சும் கடற்கரை ஆகும். இங்குள்ள அமைதியான அழகான சூழல் மனதை ஆனந்தக்கூத்தாட வைக்கும். கடலோர கவிதைகள் உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன. இதே போல கன்னியாகுமரியில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள திற்பரப்பு அருவியும் ரசிக்கத்தக்க இடமாக திகழ்ந்து வருகிறது. குளிக்க குளிக்க உற்சாகம் தரக்கூடியது.

இவை தவிர மாத்தூர் தொங்கு பாலம், மருத்துவ மலை, பேச்சிப்பாறை அணை, சங்குத்துறை கடற்கரை, தேங்காய்ப்பட்டணம் கடற்கரை என பார்த்து ரசிக்க பல இடங்களும், சுசீந்திரம் தாணுமலையான் கோவில், செயின்ட் சேவியர்ஸ் தேவாலயம், தக்கலை பீர் முகமது தர்ஹா உள்ளிட்ட தரிசிக்க வேண்டிய இடங்களும் நிறையவே உள்ளன.

உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து

உணவு வசதியைப் பொறுத்த வரை தரமான உணவு விடுதிகள் பல உள்ளன. தங்குவதற்கு கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள நாகர்கோவிலில் தனியார் லாட்ஜ்களும் சுற்றுலாத்துறை விடுதிகளும் உள்ளன. சிறப்பான சாலை வசதியும், ரயில் போக்குவரத்தும் இருக்கிறது. விமானவசதியை பொறுத்தவரை கன்னியாகுமரியில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு வந்து விடலாம். சென்னையில் இருந்து கன்னியாகுமரி சுமார் 700 கி.மீ தொலைவில் உள்ளது.

"கன்னியாகுமரி...அழகில என்னிக்குமே குமாரிதான். பார்த்து ரசிச்சு கொஞ்சம் பழகிட்டுத்தான் வாங்களேன்"

No comments: