Saturday 11 October 2008

இயற்கை தந்த இன்பக்கொடை கொடைக்கானல்

25.06.08 இயற்கை தந்த இன்பக்கொடை கொடைக்கானல்
யற்கை தந்த இன்பக்கொடை கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்றும் வர்ணிக்கப்படுகிறது. குளுகுளு கொடைக்கானலுக்கு சென்று விட்டால் மனசு கொண்டாட்டம் போடத் தொடங்கி விடும். மலைகளை தழுவிச் செல்லும் முகில் கூட்டம், சலசலத்துச் செல்லும் நீரோடை, வெள்ளியை உருக்கி விட்டாற்போல கொட்டிக் கொண்டிருக்கும் அருவி என மனதை கொள்ளை கொள்ளும் காட்சிகள் இங்கு ஏராளம்.

கொடைக்கானல் உருவான கதை:

மேற்கு தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 2133 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் கொடைக்கானல் உருவான கதையே சுவாரஸ்யம்தான். லியோட்டினன்ட் வார்ட் என்ற ஆங்கிலேயர் மலைப்பகுதிகளை சர்வே செய்வதற்காக 1821ம் ஆண்டில் முதல் முறையாக கொடைக்கானல் மலையில் ஏறுகிறார். அவரைத் தொடர்ந்து 1834ம் ஆண்டில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் தேவதானப்பட்டி வழியாக கொடைக்கானலுக்குள் பிரவேசிக்கிறார். அங்கு ஒரு சிறிய பங்களாவை செண்பகனூர் அருகே கட்டுகிறார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1836ல் டாக்டர் ஒயிட் என்பவர் கொடைக்கானல் மலையில் தாவர ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். 1845ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷனரி இரண்டு பங்களாக்களை கொடைக்கானலில் கட்டுகிறது. அவற்றின் பெயர் சன்னிசைடு மற்றும் ஷெல்டன் என்பதாகும். அதைத் தொடர்ந்து ஆறு அமெரிக்க குடும்பங்கள் கொடைக்கானலில் குடியேறுகின்றன. அந்த குடும்பங்கள்தான் கொடைக்கானலில் முதல் முறையாக வசித்த குடும்பங்கள். அதைத் தொடர்ந்து அப்போது இந்தியாவில் இருந்த ஆங்கிலேய மற்றும் ஐரோப்பியர்கள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கினர். கொடைக்கானலை தங்களது கோடைகால வசிப்பிடமாக மாற்றிக்கொண்டனர்.

இப்படி வெளிநாட்டவர் ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த கொடைக்கானலை 20ம் நூற்றாண்டில்தான் உள்ளூர் மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.

கொடைக்கானலில் பார்த்து ரசிக்க பல இடங்கள் உண்டு.

கொடை ஏரி:

கொடைக்கானல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இங்குள்ள ஏரிதான். சுமார் 24 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள ஏரி 1863ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியை 1819 முதல் 1885ம் ஆண்டு வரை மதுரை கலெக்டராக இருந்த சர் வெரே ஹென்றி லெவிஞ்ச் என்பவர் உருவாக்கி உள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கொடைக்கானலில் வசிக்க திட்டமிட்ட அவர், காலம் முழுவதும் இயற்கையுடன் இணைந்திருக்க நினைத்து இந்த அழகான ஏரியை உருவாக்கினாராம். பலவகை மீன்களையும் ஏரியில் விடுவதற்கு ஏற்பாடு செய்தாராம்.

தற்போது இந்த ஏரியில் தமிழக சுற்றுலாத்துறை படகு சவாரி நடத்தி வருகிறது. பல வகை படகுகள் இங்கு உண்டு. படகினை இயக்கியபடி இயற்கை காட்சிகளை ரசித்தவாறே ஏரியில் மிதந்து செல்வது தனி சுகம். ஏரி அருகே குதிரை சவாரியும் செய்யலாம். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு ஏரியை சுற்றி சைக்கிளிங்கும் செல்லலாம்.

ஏரியின் அருகிலேயே ஆற அமர்ந்து இயற்கையை ரசிக்க பிரையன்ட் பூங்கா உள்ளது. இங்கு பலவகை மலர்கள் செடிகள் உள்ளன. மே மாதத்தில் கோடை விழா இங்குதான் நடைபெறுகிறது.

கோக்கர்ஸ் வாக்:

இது மலை ஓரமாக அமைக்கப்பட்டு உள்ள ஒரு அருமையான பெரிய நடைபாதை. தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ள இந்த நடைபாதையில் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே நடந்து செல்வது வேறெங்கிலும் கிடைக்காத அனுபவம். 1873ம் ஆண்டில் கோக்கர் என்ற ஆங்கிலேய இஞ்சினீயர் இந்தப்பாதையை கண்டுபிடித்ததால் அவரது நினைவாக கோக்கர்ஸ் வாக் என்று அழைக்கப்படுகிறது.

பசுமை பள்ளத்தாக்கு:

கொடை ஏரியில் இருந்து சுமார் 5கி.மீ தொலைவில் பசுமை பள்ளத்தாக்கு உள்ளது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பசுமை பசுமைதான். இங்கிருந்து பார்த்தால் வைகை அணை அழகாக காட்சி அளிக்கும். இங்குள்ள மரங்கள் அடர்ந்த பள்ளத்தாக்கினை சூசைட் பாயிண்ட் அல்லது தற்கொலை முனை என அழைக்கிறார்கள்.

வெள்ளி அருவி:

வெள்ளியை உருக்கி விட்டாற்போல விழும் அருவிக்கு வெள்ளி அருவி என்று பெயர். இது கொடை ஏரியில் இருந்து சுமார் 8கி.மீ தொலைவில் உள்ளது. கொடை ஏரி நிரம்பி வழிந்து 180 அடி உயரத்தில் இருந்து கொட்டுவதே வெள்ளி அருவி ஆகும். பார்த்த பரவசத்தில் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் குளித்தும் செல்கிறார்கள்.

குறிஞ்சி ஆண்டவர் கோவில்:

கொடைக்கானலில் 12ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூக்கள் பூத்துக்குலுங்கும். அந்த வகையில் கடைசியாக கடந்த 2004ம் ஆண்டில் குறிஞ்சிப் பூ பூத்தது. கொடை ஏரியில் இருந்து சுமார் 3கி.மீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான்தான் குறிஞ்சி ஆண்டவராக இங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். இங்கிருந்து பார்த்தால் பழனிமலை பளிச்சென்று தெரியும். அதோ பாரு வைகை அணை என வைகை அணையையும் தொலைவில் பார்த்து ரசிக்கலாம்.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகத்தில் மனித வள ஆராய்ச்சி குறித்த ஏராளமான புத்தகங்கள் உள்ளன. வரலாறுகளைச் சொல்லும் பழங்காலத்து பொருட்களும் இருக்கின்றன. இவற்றை பார்வையிடலாம்.

சோலார் பிசிக்கல் அப்சர்வேட்டரி:

அரசின் வானவியல் ஆராய்ச்சி மையமான இது கொடை ஏரியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,343 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சோலார் பிசிக்கல் அப்சர்வேட்டரிதான் கொடைக்கானல் மலையில் உயரமான பகுதியாக கருதப்படுகிறது. இந்த அப்சர்வேட்டரியில் இருந்து நட்சத்திரங்கள், கோள்களை பார்த்து ரசிக்கும் வசதி இருக்கிறது.

இவை தவிர பியர்கோலா அருவி, பெய்ரி அருவி, பேரிஜாம் ஏரி, பில்லர் ராக்ஸ், செட்டியார் பூங்கா என கொடைக்கானலில் பார்த்து ரசிக்க பல இடங்கள் உள்ளன.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு மற்றும் தங்கும் இடங்களைப் பொறுத்த வரையில் கொடைக்கானலிலேயே சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற தரமான ஓட்டல்கள் உள்ளன. மதுரையில் இருந்து கொடைக்கானல் 115 கி.மீ தொலைவிலும், கோவையில் இருந்து 130 கி.மீ தொலைவிலும் உள்ளது. மதுரையிலும் கோவையிலும் விமான நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து கொடைக்கானலுக்கு நல்ல சாலை வசதிகள் உண்டு. ரயிலில் வர விரும்புவோர் கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வாகனத்தில் சுமார் 80 கி.மீ பயணம் செய்து கொடைக்கானலை வந்தடைய வேண்டும். மலைப்பாதையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளும் உண்டு. டிரைவிங்கில் எச்சரிக்கை ரொம்பவே முக்கியம். கொடைக்கானலில் ஏப்ரல், மே, ஜுன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் சீசன் மாதங்கள் ஆகும். மே மாதம் கோடை விழாவும், டிசம்பர் மாதம் குளிர்கால விழாவும் இங்கு நடத்தப்படுகிறது.

"இயற்கை தந்த இன்பக்கொடையான கொடைக்கானலுக்கு உங்க விசிட் எப்போ? டைரியை புரட்டத் தொடங்கிட்டீங்களா?"

No comments: