சென்னை |
தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. 1639ம் ஆண்டில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகள் பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் அப்போதைய விஜயநகர பேரரசரிடம் இருந்து வாணிபத்துக்காக குத்தகைக்கு எடுத்த நிலப்பகுதிதான் இப்போது ஹைடெக் சிட்டியாக, இந்தியாவின் நான்காவது பெருநகரமாக எழுந்து நிற்கும் சென்னை. வங்கக்கடலின் கரையில் சுமார் 200 சதுர கி.மீ பரப்பளவுக்கு விரிந்து நிற்கும் சென்னை, தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. சென்னையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்: செயின்ட் ஜார்ஜ் கோட்டை வங்காள விரிகுடா கடலோரத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினரால் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை தற்போது தமிழக அரசின் தலைமைச்செயலமாக செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றம் இங்குதான் கூடுகிறது. சென்னையில் முக்கிய அடையாளமாக கோட்டை திகழ்கிறது. கோட்டையில் ஒரு மியூசியமும் உண்டு. இங்குள்ள ஆயுதங்கள், நாணயங்கள், ஆடைகள் போன்றவை பழங்காலத்து கலாச்சாரத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். மெரீனா கடற்கரை சென்னையின் அடையாளம். உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பது போன்ற சிறப்புக்கள் மெரீனாவுக்கு உண்டு. காலாற நடந்தால் கவிதை பாடத்தூண்டும் அழகான கடற்கரையிது. இங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகள் இவர்களது சகாப்தத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது மேலும் மெரீனா கடற்கரையோரம் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் பேலஸ், மாநிலக்கல்லூரி போன்றவை கட்டிடக்கலையை கடைவிரித்து காட்டுகிறது. மெரீனாவின் தென்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சாந்தோம் தேவாலயமும் வரலாற்றை சொல்கிறது. ஐகோர்ட் உலகில் பெரிய நீதிமன்ற வளாகங்களில் சென்னை ஐகோர்ட் கட்டிடமும் ஒன்று. 1892ம் ஆண்டில் கட்டப்பட்டது. கோட்டை போன்ற அழகான இந்த சிவப்பு நிற கட்டிடம் சென்னையின் இன்னொரு அடையாளம். பாரிமுனையையையொட்டி இது அமைந்துள்ளது. ரிப்பன் பில்டிங் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் ரிப்பன் என்பவரின் பெயரில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் சென்னை மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பளீரென எழுந்து நிற்கும் ரிப்பன் கட்டிடம், அக்கால கட்டிடக் கலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கன்னிமாரா நூலகம் எழும்பூரில் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகம், தேசிய கலைக்கூடம், கன்னிமாரா நூலகம் ஆகியவை வியக்க வைக்கிறது. 1857ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 16-18ம் நூற்றாண்டின் கலைப்படைப்புகளை கொண்டுள்ள தேசிய கலைக்கூடம் போன்றவை பழமையை ரசிப்பவர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் விருந்தளிக்கும். பழமை வாய்ந்த மிகப்பெரிய கன்னிமாரா நூலகம் புத்தகம் வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும். மாமல்லபுரம் பல்லவர் காலத்து கலைகளுக்கு காலத்தால் அழியாத சான்றாக எழுந்து நிற்பது மாமல்லபுரம். சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 7-8ம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்கள் உருவாக்கிய குகைக்கோயில்கள், செதுக்கி வைத்த சிற்பங்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியாது. இவை தவிர பழமையான தேவாலாயம் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மலை, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூரில் அமைந்துள்ள நாட்டியக்கலைக்கூடமான கலாஷேத்ரா, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள வானவியல் அறிவுக்கு தீனி போடும் பிர்லா கோளரங்கம், கிண்டி தேசியப் பூங்கா என ரசிக்கவும் வியக்கவும் வைக்க பல இடங்கள் உள்ளன. இது மட்டுமின்றி கேளிக்கை பிரியர்களுக்காக தாம்பரம், பூந்தமல்லி அருகிலும், மாமல்லபுரம் செல்லும் வழியிலும் பல கேளிக்கை பூங்காக்கள் அமைந்துள்ளன.சென்னையில் இருந்து சுமார் 36 கி,மீ தூரத்தில் இயற்கை அழகு கொட்டும் முட்டுக்காடு, சுமார் 85 கி.மீ தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவற்றுக்கும் சென்று வரலாம். வேடந்தாங்கலில் நவம்பர் முதல் மார்ச் வரை பலவகையான வெளிநாட்டு பறவைகளை ரசிக்கலாம். உணவு, தங்குமிடம், போக்குவரத்து சென்னை, பலவகை கலாச்சாரத்தின் தலைநகரம் என்பதால் தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் தாராளமாகவும் தரமாகவும் கிடைக்கிறது. தங்கும் வசதியைப் பொறுத்தவரை பட்ஜெட் கிளாஸ், 3ஸ்டார், 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்கள் நிறைய உள்ளன. ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் உள்ளன. கடல் வழியாகவும் வரலாம். தரைமார்க்கமாக சென்னைக்குள் வர சிறப்பான சாலை வசதிகளும் உள்ளன. ஓ:கே. முடிவு பண்ணிட்டீங்களா?, சென்னை எப்போதும் சிங்காரச்சென்னைதான். வெல்கம் டூ சென்னை. |
Saturday, 11 October 2008
சென்னை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment