Saturday, 11 October 2008

மாம்பழ நகரம் சேலம்


09.07.08 மாம்பழ நகரம் சேலம்
"மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம்..." என வர்ணிக்கக்கூடிய அளவுக்கு மாம்பழத்துக்கு பெயர் பெற்றது சேலம். சேலத்து மாம்பழம் என்று சொல்லும் போதே நாவில் நீர்சுரக்கும். காரணம் சேலம் மாம்பழத்துக்கு அத்தனை ருசி.

சேலம் மிகப்பழமையான நகரம். மலைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, கஞ்சமலை, ஜருகுமலை, பச்சை மலை, அருநூத்து மலை, போதமலை என மலைகள் சூழ்ந்திருப்பதால் முதலில் சைலம் என்றழைக்கப்பட்டதாகவும் பின்னர் சைலம் மருவி சேலம் என அழைக்கப்பட்டதாகவும் சொல்வது உண்டு. மேலும் சேரநாட்டின் கிழக்கு எல்லையில் இருந்ததால் சேரலம் என்றும், சமண சமயத்தின் முக்கிய தளமாக விளங்கியதால் சைலம் என்றும் அழைக்கப்பட்டு பிறகு சேலம் என மாறியதாகவும் கூறப்படுகிறது. சேலம் பகுதியில் பார்த்து ரசிக்க இடங்கள் பல உண்டு. கூடவே அருகில் உள்ள மலைப்பிரதேசமான ஏற்காடும் சேலத்துக்கு சிறப்பு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அயோத்தியா பட்டணம்:

சேலத்தில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் உள்ள நகரம். அயோத்தியாவில் பிறந்த ராமர் இலங்கை போரை முடித்து விட்டு திரும்பும் போது இந்த ஊரில் தங்கிச் சென்றதால் அயோத்தியாப் பட்டணம் என பெயர் வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. அயோத்தியாப்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணுகோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள வாரச்சந்தை மிகவும் பழமையானது. இது 1895ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூர் அணை:

உலகத்தில் உள்ள பெரிய அணைகளில் மேட்டூர் அணை குறிப்பிடத்தக்கது. இந்த அணையால் சேலம் மட்டுமின்றி ஈரோடு, திருச்சி போன்ற பக்கத்து மாவட்டங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டர் ஆகும். இங்கு நீர்மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணை மற்றும் இங்குள்ள அழகிய பூங்கா, நீர் மின்நிலையம் போன்றவை பார்க்கத்தகுந்த இடங்கள் ஆகும்.

சங்ககிரி கோட்டை:

சங்ககிரி கோட்டை சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும். சங்ககிரி மலையில் இது கட்டப்பட்டு உள்ளது. கோட்டைக்கு 10 சுற்றுச்சுவர்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரால் குறிப்பிடப்படுகிறது. கோட்டைக்குள் 5கோவில்களும், 2மசூதிகளும் உள்ளன. திப்பு சுல்தான் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் ஆபரணங்களை இங்கு காணலாம். கோட்டைக்கு செல்லும் வழியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயமும் உள்ளது.

அருங்காட்சியகம்:

கோட்டை அருகே மாநகராட்சி எதிர்புறம் அருங்காட்சியகம் அமைந்து உள்ளது. தொல்லியல், உயிரியல், தாவரவியல் என பலதுறைகளை சேர்ந்த அரிய பொருட்கள் இங்கு உள்ளன. இவை வரலாற்று ஆர்வலர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தும்.

கோட்டை ஜாமியா மசூதி:

சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை ஜாமியா மசூதி மைசூரை ஆண்ட திப்புசுல்தான் கட்டியதாக வரலாறு. மேலும் திப்பு சுல்தான் இங்கு வழிபாடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.

கோவில்கள்:

சேலத்தில் பார்க்க மட்டுமல்ல, தரிசிக்க நிறைய கோவில்கள் உள்ளன. கஞ்சமலை சித்தர்கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், பேளூர் தான்தோன்றி ஈஸ்வரர் கோவில், கோட்டை அழகிரி நாதர் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், தேர்வீதி ராஜகணபதி கோவில், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில், குகை காளியம்மன் மாரியம்மன் கோவில் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் சேலத்தில் உள்ளன.

ஏற்காடு:

சேலம் என்றதும் அருகில் உள்ள குளுகுளு மலைப்பகுதியான ஏற்காடு நினைவுக்கு வராமல் இருக்குமா?. சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சிறிய மலைவாசஸ்தலம் ஏற்காடு. பச்சைப் பட்டு போர்த்தியதைப் போல பரந்து விரிந்திருக்கும் வனப்பகுதிகளும் காபித் தோட்டங்களும் கண்களை கொள்ளை கொள்ளும். காற்றில் மிதந்து வரும் ஏலக்காய் வாசனை நாசியைத் துளைக்கும். ஏற்காட்டில் உள்ள ஏரியில் படகுச்சவாரி உண்டு. விதவிதமான படகுகளில் சவாரி செய்து மகிழலாம். ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை பண்ணை, கிள்ளியூர் அருவி, பிரமிட் முனை (பகோடா முனை) போன்ற இடங்களுக்கு ஒரு ரவுண்டு சென்று வந்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து

சேலம் பகுதியை பொறுத்த வரை தரமான உணவு விடுதிகள் உள்ளன. நல்ல குடிநீரும் கிடைக்கிறது. சேலம் மாநகரத்திலும் அருகில் ஏற்காட்டிலும் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மற்றும் சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்தைப் பொறுத்த வரை சென்னையில் இருந்து சேலம் சுமார் 330 கி.மீ தொலைவில் உள்ளது. நல்ல சாலை வசதிகள் உண்டு. சேலத்திற்கு அருகில் திருச்சியில் விமான நிலையம் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சேலத்துக்கு சிறப்பான ரயில்வசதியும் இருக்கிறது.
"அப்புறமென்ன? சேலத்துக்கு கிளம்பி வர நாள் குறிச்சிட்டாப் போச்சு"

No comments: