Saturday, 11 October 2008

ரசிக்க தரிசிக்க ராமேஸ்வரம்

20.06.08 ரசிக்க தரிசிக்க ராமேஸ்வரம்
பாண்டியர், சோழ மன்னர்கள் ஆண்ட பகுதியான தற்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தின் அழகான கடற்கரை பகுதிதான் ராமேஸ்வரம். புனிதமான தீவுக்கூட்டங்கள் இங்கு பிரசித்தம். ராவணனை போரில் அழித்த ராமன் பின்னர் இங்கு சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உண்டு. சைவர்கள் மட்டும் வைஷ்ணவர்களால் புனிதப்பகுதியாக ராமேஸ்வரம் போற்றப்படுகிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு அழகு பூமியாய், ஆன்மீகவாதிகளுக்கு புனித பூமியாய் திகழும் ராமேஸ்வரத்தில் ரசிக்கவும் தரிசிக்கவும் பல இடங்கள் உண்டு.

அக்னி தீர்த்தம்:

இது அமைதியான வளைகுடாப்பகுதி. இதில் நீராடினால் பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் இந்தியா மட்டும் அல்ல. வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களும் இங்கு வந்து புனிதநீராடிச் செல்கிறார்கள்.

தனுஷ்கோடி:

ராமேஸ்வரத்தில் இருந்து 18கி.மீ தூரத்தில் உள்ள அழகான கடற்கரைப்பகுதி. 1964ம் ஆண்டில் கடல் விழுங்கியது போக எஞ்சியிருக்கும் பகுதி. இங்குள்ள கோதண்டராமசுவாமி கோவில் பிரசித்தமானது. ராவணனின் தம்பி விபீஷணன், ராமனிடம் இங்குதான் சரணடைந்ததாக வரலாறு. ராமர், சீதை, லட்சுமணன், விபீஷணன் விக்ரகங்கள் இங்கு உள்ளன.

கந்தமதன பர்வதம்:

தீவின் மிக உயரமான பகுதி. ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ராமேஸ்வரம் பகுதி முழுவதையும் கண்டுகளிக்கலாம். இங்குள்ள இரண்டடுக்கு மண்டபத்தில் ராமரின் பாதம் பதிந்த சக்கரம் உள்ளது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
பாம்பன் பாலம்:

கடல்மீது படுத்திருக்கும் ஒரு மலைப்பாம்பு போல காட்சி அளித்துக்கொண்டிருக்கும் அன்னை இந்திரா காந்தி பாலம். அதாவது, பாம்பன்பாலம். ஒரு அதிசயச்சின்னம். கடல் நடுவே சுமார் 2.2 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில்பாலம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கிறது. இந்தியாவில் கடல்மீது கட்டப்பட்டுள்ள மிகநீளமான பாலமும் இதுதான். கடலில் கப்பல்கள் வரும் போது இந்த ரயில்பாலம் இரண்டாக பிளந்து ஒன்று போல் உயர்ந்து வழிவிடுவது ஆச்சரியப்படுத்தும் காட்சி.

ஸ்ரீராமநாதசுவாமி கோவில்:

இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கோவில். 38.4 மீட்டர் உயரம் உள்ள கோபுரத்தை கொண்டுள்ள ஷ்ரீராமநாதசுவாமி கோவிலின் பிரகார மண்டபம் மிகவும் நீளமானது. மிகப்பெரிய தூண்களுடன் காட்சி அளிக்கும் இதன் பிரகாரத்தின் நீளம் மட்டும் 1220 மீட்டர். தலா 30 அடிகள் கொண்ட 1200 பெரிய தூண்கள் பிரம்மாண்டமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன. ராவணனை போரில் அழித்த ராமன் பிறகு இங்கு சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம் உண்டு.

குருசடைத்தீவுகள்:

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20கி.மீ தொலைவில் பாம்பன் பாலத்திற்கு மேற்குப்பகுதியில் அமைந்துள்ள அழகான தீவுக்கூட்டம். இது உயிரியல் ஆர்வலர்களின் சொர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகளும், கடலுக்கு அடியில் அரிய உயிரினங்களும் நிறைய உள்ளன. தமிழக மீன்வளத்துறையினரின் அனுமதியின் பேரிலேயே குருசடைத்தீவுகளுக்கு செல்ல முடியும்.

கஞ்சிரன்குளம்- சித்ரன்குடி பறவைகள் சரணாலயம்:

ராமேஸ்வரத்தில் உள்ள கஞ்சிரன் குளம்- சித்ரன்குடி பறவைகள் சரணாலயம் இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறது. உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவற்றுடன் திரும்பிச்செல்லும் காட்சிகள் காணக்கிடைக்காத அழகு. நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை இங்கு பறவைகள் வரும் காலமாகும்.

ராமநாதபுரம்:

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 50கி.மீ தொலைவில் உள்ள நகரம். சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த மிக பழமைவாய்ந்த பகுதி. இங்குள்ள சித்திரங்களுடன் கூடிய ராமலிங்க விலாசம், தத்துவப்பாடல்கள் பாடிய ஞானி தாயுமானசாமியின் நினைவு சின்னம் போன்றவை பார்க்கத்தகுந்த இடங்கள்.

ஏர்வாடி:

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 75கி.மீ தொலைவில் உள்ள ஏர்வாடியில் முஸ்லிம் துறவியான இப்ராகிம் சையத் அவுலியாவின் சமாதி உள்ளது. இங்கு வெளிநாடுகளிலும் இருந்து முஸ்லிம்கள் வந்து செல்கிறார்கள். இப்ராகிம் சையத் அவுலியா நினைவாக ஆண்டுதோறும் இங்கு திருவிழா நடத்தப்படுகிறது.

இவை தவிர தேவிப்பட்டணம், ஐந்து முக அனுமன் கோவில், ஜடாயு தீர்த்தம், உத்திரகோச மங்கை ராமேஸ்வரத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பார்க்கத்தகுந்த இடங்கள் ஏராளமான உள்ளன.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு விடுதி, தங்கும் வசதிகளைப்பொறுத்த வரையில் நல்ல வசதிகள் உள்ளன. தனியார் விடுதிகள் மட்டுமின்றி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும் காட்டேஜ்களும் இருக்கின்றன. முன்பதிவு செய்து வருவது நல்லது. சென்னையில் இருந்து ராமேஸ் வரத்துக்கு சாலை வழியாக வருவதற்கு 666கி.மீ பயணம் செய்ய வேண்டும். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் 173 கி.மீ தொலைவில் உள்ளது. ராமேஸ்வரத்துக்கு அருகில் மதுரையில் விமான நிலையம் உள்ளது.

"அழகான கடற்கரையை ரசிக்கணும். கூடவே ஆன்மீக தலங்களையும் தரிசிக்கணும். அப்படீன்னா அதுக்கு ஒரே சாய்ஸ் ராமேஸ்வரம்தான். நோட் பண்ணிட்டீங்களா?"

No comments: