Saturday 11 October 2008

மலைக்கோட்டை மாநகர் திருச்சி

மலைக்கோட்டை மாநகர் திருச்சி
மிழ்நாட்டின் 4வது பெரிய நகரம் திருச்சி. காவிரிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரம். அந்தக்காலத்தில் பல்லவர், சோழர், பாண்டியர், ஹொசைலர், முகலாயர் என பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி. திருச்சியின் உறையூர் கி.மு. 300ம் ஆண்டில் சோழர்களின் தலைநகரமாக புகழ் பெற்று விளங்கிய பகுதி. மிகப்பழமையான மலைக்கோட்டை, கல்லணை போன்ற பிரம்மாண்டங்கள் திருச்சியின் முக்கிய அடையாளங்கள். இப்படி சிறப்புமிக்க திருச்சியில் கோவில்களும், பார்க்கத்தகுந்த சுற்றுலா இடங்களும் நிறையவே உள்ளன.

மலைக்கோட்டை:

திருச்சிக்கு மலைக்கோட்டை மாநகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இதற்கு காரணம் இங்குள்ள மலைக்கோட்டைதான். இதன் மீதுள்ள கோவில்கள் மிகவும் பிரசித்தம். இந்த மலையானது 83 மீட்டர் உயரம் கொண்டது. சுமார் 3800 மில்லியன் ஆண்டுகள், அதாவது இமயமலையை விட மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. மலை உச்சியில் பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. செல்லும் வழியில் தாயுமானசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் போன்றவை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தெற்கு பகுதியில் பல்லவர்கள் உருவாக்கிய குகைக்கோவில்கள் உள்ளன.

ஸ்ரீரங்கம்:

திருச்சியில் இருந்து 6கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் மறுபுறம் பிரசித்தி பெற்ற வைணவ தலமான ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயர்தான் ஊருக்கும். இதை பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கிறார்கள். கோவிலில் 7சுற்று பிரகாரமும் 21 கோபுரங்களும் உள்ளன. இங்குள்ள ராஜகோபுரம் இந்திய அளவில் பெரியதாக கருதப்படுகிறது. மார்கழியில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவும், மாசியில் நடைபெறும் தெப்பத்திருவிழாவும் இங்கு சிறப்பு மிக்கது.

சமயபுரம்:

திருச்சியில் இருந்து 12கி.மீ தொலைவில் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் விசேஷமானதாக கருதப்படுகிறது. "சமயத்தில் காப்பவள் சமயபுரத்தாள்" என இங்குள்ள அம்மனை பக்தர்கள் போற்றுகின்றனர். அம்மை நோய் பாதித்தவர்களை கோவில் வளாகத்தில் தங்க வைத்து பின்னர் நோய் குணமானவுடன் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இங்கு சித்திரை மாதம் தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.

கல்லணை:

திருச்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று கல்லணை. திருச்சியில் இருந்து 24கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் கல்லணை முதலாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டங்களின் நீர்பாசனத்துக்கு பெரிதும் உதவி வரும் கல்லணை, சோழர் கால கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

முக்கொம்பு:

இயற்கை எழில் சூழ்ந்த இடம் முக்கொம்பு. காவிரி ஆறு கொள்ளிடமாக பிரியும் இடத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. பொழுது போக்குவதற்கு அருமையான இடம். திருச்சியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.

சித்தன்னவாசல்:

குகை ஓவியங்களுக்கு புகழ் பெற்ற இடம் சித்தன்னவாசல். திருச்சியில் இருந்து 58 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. விலங்குகள், பறவைகள், பூக்கள் என பலவகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டு உள்ளன. 9ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் இவை வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இங்குள்ள அர்த்த மண்டபத்தில் உள்ள மேற்கூரை ஓவியங்கள் மேலும் ஆச்சரியப்படுத்தும்.

இவை தவிர திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர கோவில், குணசீலம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில், மணப்பாறை- திண்டுக்கல் சாலையில் கீரனூர் பக்கம் அமைக்கப்பட்டு உள்ள தென்னிந்தியாவின் முதல் ரயில்வே தொங்கு பாலம், திருச்சி நகரில் உள்ள 1000 ஆண்டு பழமையான மற்றும் இந்தோ- சார்சனிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் நதிர்ஷா தர்கா, பிரான்சின் புகழ் பெற்ற லூர்துஸ் தேவாலயத்தின் மாதிரி போல அமைக்கப்பட்டு உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் போன்றவை திருச்சியில் பார்க்க தகுந்த முக்கிய இடங்கள்.

உணவு, தங்கும் இடம், போக்குவரத்து:

உணவு வசதியை பொறுத்த வரை திருச்சியில் நல்ல ஓட்டல்கள் உள்ளன. உயர்தரமான தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலாத்துறை அங்கீகரித்த விடுதிகளும் உள்ளன. திருச்சிக்கு சாலை வசதி சிறப்பாக உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, 325 கி.மீ தொலைவில் உள்ளது. ரயில்வசதி தாராளமாக உண்டு. திருச்சியில் விமான நிலையமும் உள்ளது.

" திருச்சிக்கு வந்தாலே புது மகிழ்ச்சிதான். அந்த மகிழ்ச்சியை மிஸ் பண்ணிட யாருக்குத்தான் மனசு வரும்?"

No comments: