பட்டால் பளபளக்கும் காஞ்சிபுரம் |
இந்தியாவின் புனிதமான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. சென்னையையொட்டி அமைந்துள்ள அழகான நகரம். பளபளக்கும் பட்டுச்சேலைகள் தயாரிப்பால் பளிச்சென தெரியும் ஊர். காஞ்சிபுரத்தில் திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் எனக்கூறுவார்கள். சுமார் 50க்கும் மேற்பட்ட கோவில்களால் நிறைந்து கோவில் நகரம் என்றும் காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. கி.பி 6-8ம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த காஞ்சிபுரம் அதன் பிறகு சோழர், விஜயநகர மன்னர்கள், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழும் வந்தது. காஞ்சிபுரத்தில் பார்ப்பதற்கும் தரிசித்து வருவதற்கும் நிறைய இடங்கள் உள்ளன. பட்டுச்சேலை தயாரிப்பு: காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல நீ நடந்து வரவேண்டும் என வர்ணிக்கும் அளவுக்கு புகழ் பெற்றது காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள். காஞ்சிபுரம் பட்டுச்சேலைக்கு இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் மவுசு உண்டு. பளபளப்பு, நேர்த்தியான வடிவமைப்பு போன்றவை காஞ்சிபுரம் பட்டுச்சேலைக்கு பிளஸ் பாயிண்ட். இங்குள்ள மக்கள் தொகையில் 75சதவீதத்தினர் பட்டுச்சேலை தயாரிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு உள்ளனர். 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுக்கூடங்கள் உள்ளன. அழகழகான பட்டுச்சேலைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். காமாட்சி அம்மன் கோவில்: இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய சக்தி வழிபாட்டு தலங்களில் காமாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்குள்ள அம்மன் காஞ்சி காமாட்சி என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில் ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில்: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கோபுரம் அமையப்பெற்ற கோவில்களுள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் ஒன்று. இங்குள்ள கோபுரம் 57 மீட்டர் உயரம் கொண்டது. கோவில் வளாகத்தில் 2500 ஆண்டு பழமையான மாமரம் ஒன்றும் அமைந்துள்ளது. ஆயிரம் கால் மண்டபம், 5சுற்றுப் பிரகாரங்கள் இங்கு உள்ளன. இங்குதான் சிவசாமி சித்தர் என்பவர் தங்கியிருந்து எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்த்தி ஜீவசமாதி அடைந்தார். வரதராஜ பெருமாள் கோவில்: வரதராஜ பெருமாள் கோவிலின் நூறுகால்மண்டபத்தில் உள்ள தூண்கள் கலைவேலைப்பாடு மிக்கது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல்சங்கிலி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும். இவை தவிர கைலாசநாதர் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோவில், சித்திர குப்தர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஏராளமான கோவில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. அண்ணா நினைவிடம்: அறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் சி.என்.அண்ணாத்துரை பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் வாழ்ந்த இல்லம் தற்போது அண்ணா நினைவிடமாக உள்ளது. அண்ணா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் இங்கு காட்சி வைக்கப்பட்டு உள்ளன. இவை அண்ணாவின் வரலாற்றை உணர்த்திக்கொண்டிருக்கின்றன. உணவு, தங்குமிடம், போக்குவரத்து: உணவு வசதியைப் பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் நல்ல ஓட்டல்கள் உள்ளன. தங்கும் விடுதிகளும் உண்டு. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் 70 கி.மீ தொலைவுக்குள் இருப்பதால் சென்னையில் இருந்து கொண்டும் காஞ்சிபுரம் சென்று வரலாம். "ஓ.கே. சென்னை டிரிப்புல இனி காஞ்சிபுரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என முடிவு பண்ணிட்டீங்களா?" |
Saturday, 11 October 2008
பட்டால் பளபளக்கும் காஞ்சிபுரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment