Saturday, 11 October 2008

ஆசியாவின் வெனிஸ் ஆலப்புழா

கேரளாவில் நீர்வளம் நிறைந்த மாவட்டம் ஆழப்புழா. இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரும் நீர்வளம் நிறைந்ததுதான். வெனிஸ் நகரில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு செல்வதானால் கூட படகில்தான் செல்ல வேண்டும். அதுபோலத்தான் ஆழப்புழாவும். வீட்டை விட்டு ஸ்கூல், காலேஜ், ஷாப்பிங் செல்லவேண்டும் என்றால் பெரும்பாலும் படகில்தான் செல்ல வேண்டும். பால், பேப்பர் போன்ற தினசரி சமாச்சாரங்கள் வருவதும் படகுவழிதான். இதனாலேயே ஆசியாவின் வெனிஸ் என ஆழப்புழா அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேற்கே...அலைகளை ஆடையாக தவழ விட்டபடி அழகாக புரண்டு கொண்டிருக்கும் அரபிக்கடல். ஊருக்குள் வெள்ளியை உருக்கி விட்டாற்போல ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏரிகள். நன்னீர் ஆறுகள். உப்பங்கழிகள். இதுதான் ஆழப்புழா. இங்கு நடைபெறும் பாம்புப்படகுப் போட்டி உலக அளவில் புகழ் பெற்றது. படகுச்சுற்றுலாவும் பிரபலம். அழகான ஆலப்புழா மாவட்டம்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் டூரிஸ்ட் ஸ்பாட்.

அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில்:

ஆலப்புழாவில் இருந்து சுமார் 15கி.மீ தொலைவில் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் உட்புறச்சுவர்களில் வரையப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் காண்போரை ஆச்சரியப்படுத்தும். இங்கு பள்ளிபாணா என்ற பெயரில் ஒரு மாயமந்திரக்கலை நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த மாயமந்திரக்கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கதிகலங்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பிரசாதமாக பால்பாயசம் வழங்கப்படுகிறது. இதன் சுவை, பக்தர்களின் நாவைச் சுழற்றச் செய்யும்.

காயங்குளம் கிருஷ்ணாபுரம் அரண்மனை:

மார்த்தாண்ட வர்ம மன்னனால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆழப்புழாவில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கீழ்த்தளத்தில் காணப்படும் கஜேந்திர மோட்சம் சுவரோவியம் ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், வெண்கலச் சிற்பங்கள் அரண்மனையின் வரலாற்றை உணர்த்துகின்றன.

சக்குலத் பகவதி கோவில்:

அம்பலப்புழா நீராட்டுபுரத்தில் சக்குலத் பகவதி கோவில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கடவுள்களையும் தோற்றுவித்த மகாசக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள். இங்கு நடக்கும் பொங்கல் மகா உத்சவ விழா பிரசித்தம். இதில் நாடு முழுவதிலும் இருந்து பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகிறார்கள்.

எடத்துவா சர்ச்:

ஆழப்புழாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சர்ச் 1810ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். ஐரோப்பாவின் மத்திய கால கோதிக் கலைப்பாணியில் இந்த சர்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து மனம் ஒன்றிப் பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலும் இருந்து இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.

குட்டநாடு:

கேரளத்தின் அமுதசுரபியாக (நெற்களஞ்சியமாக) குட்டநாடு விளங்கி வருகிறது. இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேல் நெல் வயல்வெளிகள்தான். இதுதவிர வாழை, வள்ளிக்கிழங்கு, கொடிவள்ளிக்கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிடுகின்றனர். குட்டநாடு கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டருக்கு கீழே அமைந்துள்ளது. இருந்தபோதிலும் இங்கு விவசாயம் செழிப்பாக நடப்பது ஆச்சரியம் என்கிறார்கள்.

இவை தவிர அர்த்துங்கல் புனித செபாஸ்டியான் சர்ச், ஆலப்புழா கடற்கரை, கருமாடிக்குட்டனில் உள்ள புத்தர் சிலை, குன்னத்துமலை மகாதேவன் கோவில், சவரா பவன், சம்பங்குளம் சர்ச், பதிரா மணல், வரலாற்றில் இடம் பெற்றுள்ள புன்னப்பரா கிராமம் உள்ளிட்ட பல இடங்கள் ஆலப்புழா மாவட்டத்தில் பார்க்கத்தகுந்தவை. மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகுச் சுற்றுலாவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு படகுச்சுற்றுலா அலுவலகத்தில் முன்னரே பதிவு செய்தல் வேண்டும்.

பாம்புப் படகுப்போட்டி:

ஆலப்புழாவில் பலவிதமான படகுப்போட்டிகள் நடத்தப்படுகிறது என்றாலும் இவற்றில் புகழ் பெற்றது ஜுலை மாதத்தில் நடத்தப்படும் சுண்டன்வள்ளம் பாம்புப்படகு போட்டிதான். மிக நீளமான படகை ஏராளமானோர் ஒரே நேரத்தில் துடுப்புபோட்டு அசுர வேகத்தில் செலுத்துவார்கள். பரவசப்படுத்தும் இந்த சுண்டன்வள்ளம் படகுப்போட்டியை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

ஆலப்புழா மாவட்டத்தில் உணவு வகைகளைப் பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கிறது. தங்குவதற்கு சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. அசைவப் பிரியர்கள் விதவிதமான மீன்களை ருசிக்கலாம். ஆழப்புழா மீன்களின் சுவை அத்தனை சீக்கிரம் நாவை விட்டு அகன்று விடாது. போக்குவரத்தைப் பொறுத்தவரை ஆழப்புழாவில் ரயில் நிலையம் உள்ளது. பிற பகுதிகளில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80கி.மீ தொலைவில் கொச்சினில் விமான நிலையம் அமைந்துள்ளது. கொச்சினில் இருந்து ஆழப்புழாவுக்கு நல்ல சாலை வசதியும் இருக்கிறது. சாலை மார்க்கமாக சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆழப்புழாவை தொட்டு விடலாம்.

"பரந்து கிடக்கும் தண்ணீர். பரவிக்கிடக்கும் அழகு. பார்க்கும் இடங்களிளெல்லாம் படகு. இதையெல்லாம் மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும்?"

No comments: