Saturday, 11 October 2008

சுதந்திர போருக்கு வித்திட்ட வேலூர்

வேலூர் என்றவுடன் இங்குள்ள பிரம்மாண்டமான கோட்டையே முதலில் நினைவுக்கு வரும். வேலூர் கோட்டைக்குள் 1806ம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் சுதந்திரபோருக்கான தொடக்கமாக கருதப்படுகிறது. அந்த வகையில் சுதந்திரப்போராட்டத்துக்கு வேலூர் வித்திட்டது என்று கூட கூறலாம். பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்புகள், பிஜப்பூர் சுல்தான்கள் என பலரது ஆளுகைக்கு வேலூர் உட்பட்டு இருந்தது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பழமையான நகரமான வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்க தரிசிக்க நிறைய இடங்கள் உள்ளன.

வேலூர் கோட்டை:

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை 16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும். பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன. ஆங்கிலேயரை எதிர்த்தவர்களுக்கு இந்த கோட்டைதான் சிறைக்கூடமாக திகழ்ந்துள்ளது. திப்பு சுல்தானின் குடும்பத்தினர், இலங்கை கண்டியை ஆண்ட விக்ரம ராஜசிங்கே உள்பட பலர் இங்கு சிறைவைக்கப்பட்டதாக வரலாறு. இந்த சிறைக்குள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஷா மகால், கண்டி மகால் என பல மகால்கள் உள்ளன. இங்குள்ள தொல்பொருள் அருங்காட்சியத்தில் உள்ள பொருட்கள் கடந்த கால வரலாற்றை இப்போதும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. மேலும் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக எழுந்து நிற்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில், 1846ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப் கட்டிய சதுரவடிவ மசூதி என பார்க்கத்தகுந்த இடங்கள் வேலூர் கோட்டையில் உள்ளன. கோட்டையைச் சுற்றியுள்ள பெரிய அகழியில் சுற்றுலாத்துறை சார்பில் படகுப்போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோவில்:

வேலூர் அருகே தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோவிலின் மைய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டதாகும். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து கொல்லர்களை வரவழைத்து தங்கக் கோபுரத்தை அமைத்துள்ளனர். ஸ்ரீநாராயணி பீடத்தால் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கோவில் நட்சத்திர வடிவில் அழகாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

பெரிய மசூதி:

வேலூர்- பாக்கியாபாத் சாலையில் அமைந்திருக்கும் பெரிய மசூதி சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரே நேரத்தில் 2ஆயிரம் பேர் அமர்ந்து தொழுகை செய்யும் அளவுக்கு பெரிய மசூதி. இங்குள்ள அரபிக் கல்லூரி தென்னிந்தியாவின் முதல் அரபிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது.

மத்திய ஆலயம்:

வேலூரில் உள்ள தென்னிந்திய திருச்சபை மத்திய ஆலயம் டாக்டர் ஜடாஸ்கர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1968ல் பிரதிஷ்டை செய்யப்பட்டாகும். தமிழ்நாட்டின் பெரிய தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டிலேயே இடையில் தூண்கள் இன்றி கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.

அமிர்தி காடு:

வேலூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள பசுமையான பகுதி. இங்கு அழகான பூங்கா, வனவிலங்கு சரணாலயம் உள்ளன. ஜிலீரென ஓடிக்கொண்டிக்கும் சிற்றோடையும், அமைதியாக விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சியும் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

ஜவ்வாது மலை:

சந்தன மரங்களும், ருசியான பழங்களைத்தரும் மரங்களும் நிறைந்துள்ள அழகான அடர்ந்த காட்டுப்பகுதி. மலையேற்றப் பிரியர்களின் மனம் கவர்ந்த இடம். வேலூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆற்காடு:

வரலாற்றில் இடம் பிடித்த இடம். வேலூரில் இருந்து 24 கி.மீ தொலைவில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 18ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட நவாப்புகளின் தலைநகரமாக விளங்கிய இடம். இங்குள்ள கோட்டை பிரபலமானது. 1751ம் ஆண்டில் நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியைக் கைப்பற்றியதன் நினைவாக இங்கு அமைக்கப்பட்ட டெல்லி கேட் மற்றும் பச்சைக்கல் மசூதி, திப்பு அவுலியா மசூதி போன்றவை ஆற்காட்டில் பார்க்கத்தகுந்த இடங்கள்.

ஏலகிரி மலை:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி, வேலூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ளது. இயற்கை கொட்டிக்கிடக்கும் ஏலகிரியில் எங்கு திரும்பினாலும் பசுமை பசுமைதான். இங்குள்ள புங்கனூர் ஏரியில் படகு சவாரி செய்யலாம். வேலவன் கோவிலை தரிசிக்கலாம். மூலிகைப் பண்ணைக்கு சென்று ரசித்து வரலாம். ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏலகிரியில் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதியைப் பொறுத்த வரை வேலூர் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நல்ல ஓட்டல்களும் உள்ளன. சுற்றுலாத்துறை ஓட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் உள்ளன. சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் வேலூர் அமைந்துள்ளது. நல்ல ரோடு வசதி உள்ளது. ரயில் வசதியும் இருக்கிறது.

"வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஊர் வேலூர். உங்கள் சுற்றுலா திட்டத்தில் இடம் பெறுவது எப்போது...?"

No comments: