27.05.08 இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி |
திருநெல்வேலி. இது வீரமான மட்டுமல்ல, ஈரமான ஊரும் கூட. "வாங்க அண்ணாச்சி. சவுக்கியமா இருக்கியளா? இருந்து சாப்டுட்டுத்தான் போணும்" என அன்புக்கட்டளையிடும் சாதி, மத பேதமற்ற மக்கள் நிறைந்த ஊர். வற்றாத தாமிரபரணி நதிக்கரையில் வாடாமல்லியாக பூத்து நிற்கும் திருநெல்வேலி, அந்தக்காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலை நகராகவும் மணம் வீசியது. சுமார் 2ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருநெல்வேலி சீமையில் பார்த்து ரசிக்கத்தக்க இடங்கள் நிறைய உண்டு. அவற்றில் பல அக்மார்க் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடங்கள். வாருங்கள். ரசித்து விட்டு வரலாம். குற்றாலம்: திருநெல்வேலி மாநகரத்தில் இருந்து மேற்கில் சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ளது குற்றாலம், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் சிற்றாறு சீற்றம் பெற்று இங்கு அருவிகளாக கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பாலருவி, புலியருவி என திரும்பிய திசையெங்கும் இங்கு அருவிகள் மயம்தான். மேற்குத்தொடர்ச்சி மலை யில் நோய்தீர்க்கும் மூலிகைச்செடிகள் அதிகம். இதன் மீது தவழ்ந்து வரும் சிற்றாறுதான் அருவியாகக் கொட்டுகிறது என்பதால், மூலிகைத் தன்மை கலந்த தண்ணீரில் குளிக்க குளிக்க ஆனந்தம் பொங்குகிறது. குளியல் முடித்த கையோடு குற்றாலத்தில் குற்றா லநாதராக அருள்பாலித்து வரும் சிவபெருமானை தரிசிப்பது மேலும் ஆனந்தமே. ஜுலை மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை குற்றால சீசன் களைகட்டும். கூந்தன் குளம்: வெளிநாட்டு பறவைகளுக்காக இயற்கை அன்னை ஏற்படுத்தித்தந்த இலவச பிரசவ ஆஸ்பத்திரிதான் கூந்தன்குளம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 38கி.மீ தூரத்தில் நாங்குநேரி தாலுகாவில் அமைந் துள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் டிசம் பரில் படையெடுத்து வரும் வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன. பின்னர் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து குஞ்சுகளுடன் ஜுன், ஜுலை மாதத்தில் சொந்த நாடு களுக்கு பறந்து விடுகின்றன. சுமார் 35 வகையான பறவைகள் இவ்வாறு ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. பறவைகளை நேசிப்பவர்களுக்கு இந்த காட்சிகளெல்லாம் மிகவும் பரவசம் அளிக்கக்கூடியது. முண்டன்துறை: திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தூரத்தில் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சுமார் 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை உள் ளிட்ட பலவகை விலங்குகள் உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் (டிரெக்கிங்) ஈடுபடலாம். காட்டுக்குள் தங்கு வதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாச முத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு. குடும்பத்துடன் செல்பவர்கள் இங்கு தங்கி இயற்கை அழகை ரசித்து விட்டு வரலாம். அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி: பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவியும் அகஸ்தியர் கோவிலும் பிரசித்தம். இங்குதான் அகஸ்திய மாமுனிவருக்கு சிவனும் பார்வதியும் காட்சி அளித்தனர் என்பதால் அகஸ்தியர் கோவில் கட்டப்பட்டது என்ற வரலாறும் உண்டு. புனிதமான இடமாக இது கருதப்படுகிறது. இதே பகுதியில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டும் இன்னொரு அழகான அருவி பாண தீர்த்த அருவி. முண்டன்துறை வனச்சரகத்தில் இது அமைந்துள்ளது. காரையார் அணையில் இருந்து படகு மூலம் இங்கு செல்லலாம். காட்டுப்பாதை வழியே நடந்தும் செல்லலாம். ரோஜா திரைப்படத்தில் சின்னச்சின்ன ஆசை பாடலில் அழகான ஒரு அருவி இடம் பெற்றிருக்குமே? அது இந்த பாணதீர்த்த அருவிதான். ரோஜா படத்தின் நினைவாக ரோஜா அருவி என்றும் அழைக்கின்றனர். இந்த அருவியின் அழகு உங்களையும் ஆடிப்பாட வைத்து விடும். மாஞ்சோலை: மணிமுத்தாறு அருகே உள்ள ஒரு ஜிலுஜிலு மலைப்பகுதி மாஞ்சோலை. இதை ஒரு மினி ஊட்டி என்று கூட சொல்லலாம். தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மாஞ்சோலையில் சற்று ஒதுங்கி விட்டு வரலாம். கோவில்கள்: கோவில்களுக்கும் திருநெல்வேலி மாவட்டம் புகழ்பெற்றது. திருநெல் வேலி மாநகரின் இதயப்பகுதியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. காந்திமதி (பார்வதி) சகிதமாக நெல்லையப்பர் (சிவன்) அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். பாரம்பரிய மிக்க இந்தக்கோவிலின் தேரோட்ட விழாவில் திருநெல்வேலியே திரண்டு வந்து வடம் பிடிக்கும். இங்குள்ள பொற்றாமரை குளம், இசையெழுப்பும் தூண்கள் போன்றவை மேலும் ஆச்சரியப்படுத்தும். இதே போல தெற்கின் காசி என்றழைக்கப்படும் தென்காசி காசிவிஸ் வநாதர் கோவிலும் பக்தர்களின் மனம் கவர்ந்தது. பாராம்பரியமிக்க இந்தக் கோவிலை கட்டியவன் பராக்கிரம பாண்டிய மன்னன் ஆவான். இந்த மன்னன் அமைத்த 172 அடி உயர பிரம்மாண்ட கோபுரம் பழுதானதால் சில ஆண்டுகளுக்கு முன் கோபுரம் புனரமைக்கப்பட்டு 163 அடி உயரத்தில் புதிதாக அழகுற எழுப்பப்பட்டு உள்ளது. இவை தவிர அம்பாசமுத்திரத்தில் உள்ள திருமூலநாதசுவாமி கோவில், வீரமா தாண்டேஸ்வரர் கோவில், அம்மையப்பன் கோவில், கிருஷ்ணசுவாமி கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்கள், நாங்குநேரியில் உள்ள வானமாமலை கோவில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண் டநாத சுவாமி கோவில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண கோவில் உள்ளிட்ட கோவில்கள் மிகவும் பிரசித்தம். பிற தலங்கள்: இதே போல பொட்டல்புதூரில் 1674ம் ஆண்டில் கட்டப்பட்ட முகைதீன் ஆண்டவர்கள் தர்ஹா, ஆத்தங்கரையில் உள்ள சேக்முகமது- செய்யதலி பாத்திமா தர்ஹா போன்றவையும், திருநெல்வேலி முருகன் குறிச்சியில் உள்ள பழமைவாய்ந்த சர்ச், உவரியில் உள்ள கப்பல்மாதா சர்ச் போன்ற வையும் பார்க்கத்தகுந்த ஆன்மீக தலங்களாக விளங்குகின்றன. உணவு, தங்குமிடம், போக்குவரத்து திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்த வரை சுத்தமான தண்ணீர் இங்கு உத்தரவாதம். நகரங்களில் நல்ல உணவு விடுதிகள் உள்ளன. தங்குமிடத்தைப் பொறுத்த வரையிலும் நல்ல லாட்ஜுகள், காட்டேஜ்கள் உள்ளன. அரசுத்துறை காட்டேஜ்களுக்கு முன்பதிவு செய்வது மிகவும் முக்கியம். போக்குவரத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலிக்கு அருகே தூத்துக்குடியில் விமான நிலையம் உள்ளது. திருநெல்வேலி நகரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து தாராளமாக இருக்கிறது. சாலை வசதியும் உள்ளது. கேரளாவுக்கு அருகில் உள்ள மாவட்டம் என்பதால் டைம் இருந்தால் கேரளாவுக்கும் ஒரு விசிட் செய்யும் ஏற்பாட்டுடன் வரலாம். "என்ன அண்ணாச்சி! திருநெல்வேலிக்கு புறப்பட்டுட்டீங்களா? எதையோ....ஒண்ணை....சொல்ல மறந்துட்டோமே! ஆ...அதேதான்... திருநெல்வேலி அல்வா. ஊர் முழுதையும் சுத்திப்பார்த்துட்டு அப்டியே திருநெல்வேலியில இருட்டுக்கடை அல்வாவையும் வாங்கிக்கிட்டு திரும்புனீங்கன்னா...பயணம் சும்மா கும்முனு இருக்குமுல்ல". |
Saturday, 11 October 2008
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment