Saturday, 11 October 2008

கோயம்புத்தூர

கோயம்புத்தூர
"ஏனுங்க. எப்படீ இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா. நல்லதுங்க" என கொங்கு தமிழில் கொஞ்சிப்பேசும் கோயம்புத்தூர் மரியாதைக்கு பெயர் பெற்றது. தென்னிந்தியாவின் பஞ்சாலை தலைநகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் போன்ற அடைமொழிகளும் கோயம்புத்தூருக்கு உண்டு. இங்கு முதல் பஞ்சாலை 1888ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன.

உழைப்புக்கு, சுறுசுறுப்புக்கும் உதாரணமாக திகழும் கோயம்புத்தூரின் அந்தக்கால பெயர் கொங்குநாடு என்பதாகும். நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து கோயம்புத்தூர் (சுருக்கமாக கோவை) என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் நிலவும் இதமான தட்பவெப்பநிலையும் ஈரக்காற்றும் இதயத்தை தாலாட்டும்.
கோவையில் பார்க்கத்தகுந்த சிறப்பு மிக்க இடங்கள்
கோவைக்குற்றாலம்

கோவை மாநகரில் இருந்து சுமார் 37கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிதான் கோவைக்குற்றாலம். ஆள்அரவமற்ற அடர்ந்த காட்டுப்பகுதிக்குள், பறவைகள் மற்றும் மிருகங்களின் சத்தங்களும் கொஞ்சல்களும் மட்டுமே எதிரொலிக்கும் சூழலில் ஒரு குளியல் போட்டு வருவது புதுமை அனுபவமே.
சிறுவாணி அணை

கோவை மக்களின் தாகம் தணிக்கும் சுவையான சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடம், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. கோவை மாநகரில் இருந்து சுமார் ஒரு மணிநேர பயணத்தில் சென்று விடலாம். உலகப்புகழ் பெற்ற சுவையான சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடத்தை பார்த்ததுடன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ஆசை தீர ரசித்த திருப்தியும் ஏற்படும்.
வெள்ளிங்கிரி மலை

இது தென்னிந்தியாவின் கைலாயம் என அழைக்கப்படுகிறது. உயரமான செங்குத்தான மலையில் சுமார் 8கி.மீ ஏறிச்சென்று வெள்ளிங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்கள் இங்கு விசேஷமானது. அப்போது கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

பச்சைப்பட்டாடையில் விழுந்த ரோஜாவைப்போல, பசும் சோலைக்குள் சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெற்காசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்தியாவின் பதினாறு பெரிய வேளாண்மை பல்கலைக்கழகங்களில் இது சிறப்பிடம் வகிக்கிறது. உணவின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயத்துக்கு புத்தம் புதிய கண்டுபிடிப்புகளை அர்ப்பணிக்கும் இந்த பல்கலைக்கழகத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வரலாம்.
வனக்கல்லூரி

இந்தியாவின் பழமையான ஒரு கல்லூரி. வன அதிகாரிகளை உருவாக்கி வரும் இந்த கல்லூரிக்குள் வன அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. காட்டில் கிடைக்கும் பல்வேறு அரிய பொருட்கள் மட்டுமின்றி இறந்து போன பல மிருகங்களின் உறுப்புகளையும் பதப்படுத்தி பல்லாண்டுகளாக காட்சிக்கு வைத்துள்ளனர். அடர்ந்த காட்டுக்குள் சென்ற அனுபவத்தை இந்த அருங்காட்சியகம் தரும்.
ஜி.டி.நாயுடு தொழிற்காட்சி வளாகம்

கோவைக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி மறைந்த ஜி.டி.நாயுடு பெயரால் அமையப்பெற்றுள்ள இந்த தொழிற்காட்சி வளாகத்துக்குள் ஜி.டி.நாயுடுவின் பலவகையாக கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுள்ளன. எலக்ட்ரானிக்ஸ், இயந்திரவியல் மற்றும் விவசாயத்துறையில் அவரது பல வகையான கண்டுபிடிப்புகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
ஆனைமலை இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம்

கோவையிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் (பொள்ளாச்சியில் இருந்து சுமார் 37 கி.மீ) ஆனைமலையில் அமைந்துள்ளது இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,400 மீட்டர் உயரத்தில் 958 சதுர கி.மீ பரப்பளவில் அமையப்பெற்றுள்ள இந்த பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான் மற்றும் பல்வேறு அரிய வகை மிருகங்கள் உலாவருவதை பார்த்து ரசிக்கலாம். டாப் சிலிப் என்ற சரிவான புல்வெளியும் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்கு மரங்களில் அமைக்கப்பட்டுள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான மரவீடுகளில் இரவில் தங்கி அதிகாலையில் எழுந்து மிருகங்களின் நடமாட்டத்தை கண்முன் ரசிப்பது அரிதான மற்றும் த்ரில்லான அனுபவம்.
திருப்பூர்
கோவையில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் அமைந்துள்ள பனியன் தொழில் நகரம். மூவர்ணக்கொடியை விழாது பிடித்து தன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்த கொடிகாத்த குமரனை நினைவுபடுத்தும் ஊர். குமரன் உயிர்நீத்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு அப்பகுதி குமரன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. தடுக்கி விழுந்த இடமெல்லாம் பனியன் சம்பந்தப்பட்ட ஆலைகள், கம்பெனிகள் என இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கும் தொழில் நகரம் திருப்பூர். பனியன் உற்பத்தி வாயிலாக நம் நாட்டுக்கு பெரும் அன்னியச்செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூர் நகரத்துக்கு சென்றால் சுறுசுறுப்பின் சூட்சுமத்தை அறியலாம்.

மருதமலை முருகன் கோவில்
கோவை மாநகரில் இருந்து சுமார் 10 கி,மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோவில். இந்த மலையில் பல வகையான மூலிகைச்செடிகள் உள்ளதால் மருந்தன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பூசம் மற்றும் திருக்கார்த்திகை இங்கு விசேஷமான நாட்கள்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது. கரிகால சோழனால் கட்டப்பட்ட மிகப்பழமையான கோவில். பங்குனி உத்திர விழா இங்கு சிறப்பானது.

தியானலிங்கம்
கோவையில் இருந்து சுமார் 30கி.மீ தூரத்தில் வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 13 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தியானலிங்கத்தை தரிசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருகின்றனர்.

பெதஸ்தா
சிறுவாணி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெதஸ்தா, கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைக்கூடமாகும். கிறிஸ்துவின் கதைகளை விளக்கும் காட்சிக்கூடங்கள், தோட்டங்கள் இங்கு சிறப்பு வாய்ந்தவை.
இவை தவிர கோவையில் பார்க்கவும், தரிசிக்கவும் ஈச்சனாரி விநாயகர் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில், மாசானியம்மன் கோவில், குரங்கு நீர்வீழ்ச்சி, திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோவில் என நிறைய உள்ளன.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து
சுவையான உணவு வகைகளும், சுத்தமான தண்ணீரும் கோவையில் உத்தரவாதம். தங்குமிடங்களை பொறுத்தவரை பட்ஜெட் கிளாஸ், சொகுசு ஹோட்டல்களும் உள்ளன. ரயில் நிலையம், விமானநிலையம் உள்ளது. தரை மார்க்கமாக சென்னையில் இருந்து கோவை வர சுமார் 500 கி.மீ. நல்ல சாலை வசதி உள்ளது.
"அட இம்புட்டு நேரம் இவ்வளவும் சொல்லிப்புட்டோம்ல. புறப்பட்டுட்டீங்களாக்கும் கோயம்புத்தூருக்கு. நல்லதுங்க. வாங்க"

No comments: