Saturday, 11 October 2008

கலைகளால் மிளிரும் தஞ்சை

02.06.08 கலைகளால் மிளிரும் தஞ்சை

ஞ்சை என சுருக்கமாக அழைக்கப்படும் தஞ்சாவூர், பாரம்பரிய கலை களை பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஊர். தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக திகழும் பசுஞ்சோலை. சோழர்கால கட்டிடக்கலைகளால் நம்மை சொக்க வைத்துக்கொண்டிருக்கும் பழமையான நகரம். உலகத்தையே ஓ போட வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பில்லா தஞ்சை ஓவியக்கலையும் இதன் தனி அடையாளம்தான். இப்படி பழமையான சிறப்புகளைக் கொண்ட தஞ்சாவூரை வலம் வருவது ஒரு புதுமை அனுபவமே.

பிரகதீஸ்வரர் கோவில்:

சோழர் ஆட்சியின் கீழ் 10 முதல் 14ம் நூற்றாண்டு வரை இருந்து வந்த தஞ்சாவூர், இந்த நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கியது. ராஜராஜ சோழனால் கி.பி. 985- 1012 ம் ஆண்டுகளில் கட்டப்பட்டதுதான் பிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில். பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்கள், விண்ணைத்தொட்டு நிற்கும் கோபுரம், கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ள பிரகாரங்கள் போன்றவை சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பை இன்றளவும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

கோவில் அருகே அரண்மனையும் உள்ளது. இங்குள்ள சங்கீத மகால் 1550ம் ஆண்டில் நாயக்கர்கள் மற்றும் மாராத்தா மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளால் ஆன சுமார் 30ஆயிரத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் காகித ஆவணங்கள் இங்கிருக்கும் சரஸ்வதி மகாலில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் வரலாற்றை நாமும் புரட்டிப்பார்க்கலாம். அரண்மனை அருகிலேயே சிவகங்கை குளம் ஒன்று உள்ளது. இதில் உள்ள இனிப்பான நீரும் ஆச்சரியமான அம்சங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இன்னொரு ஆச்சரியம் இந்தப்பகுதியில் உள்ள ஷ்வார்ட்ஸ் சர்ச். இது சரபோஜி மன்னர் தனது குருவும் டேனிஷ் தூதுவருமான ரெவரென்ட் ஷ்வார்ட்ஸ் என்பவரின் நினைவாக கட்டியதாகும். அரண்மனைக்கு உள்ளே உள்ள ராஜராஜ அருங்காட்சியகம் தென்னிந்தியாவின் சிறப்பான வெண்கலச்சிலைகளின் கருவூலமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

இவை தவிர தஞ்சாவூரைச் சுற்றிலும் பார்த்து பரவசப்பட நிறைய இடங்கள் உள்ளன.

கும்பகோணம்:

தஞ்சாவூரில் இருந்து 11கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீகண்டீஸ்வரர் (பிரம்மா) கோவில் மற்றும் ஹர்ஷவிமோசன பெருமாள் கோவில்கள் பிரசித்தம். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் அவதரித்த திருவையாறு தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ தொலைவில்தான் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலை, சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களுக்கு புனிதமான இடமாக திகழும் கும்பகோணம், சோழர்களின் பழமையான தலைநகரங்களின் ஒன்றான திருவாரூர் போன்றவை தஞ்சாவூருக்கு அருகில் உள்ள நகரங்களே.

கோடியக்கரை (பாயிண்ட் காலிமர்):

இயற்கை பிரியர்களுக்கு கண்கொள்ளா விருந்தளிக்கும் இடம் கோடியக்கரை சரணாலயம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. நீர்க்கோழிகள், கொக்குகள் போன்றவற்றை இங்கே கூட்டம் கூட்டமாக பார்க்கலாம். துள்ளி ஓடும் புள்ளி மான்களை ரசிக்கலாம். இங்குள்ள பூநரை ரெஸ்ட் அவுசில் கட்டணம் செலுத்தி விட்டு ஜீப்பில் காட்டுக்குள் ரவுண்ட்ஸ் செல்லலாம்.

நவம்பரில் இருந்து பிப்ரவரி வரை இங்கு கொக்குளை காணலாம். மான்களை ஆண்டு முழுவதும் ரசிக்கலாம். குடும்பத்துடன் வருபவர்கள் வனத்துறைக்கு சொந்தமான பூநரை ஓய்வு விடுதி, கோடியக்கரை ஓய்வு இல்லம் போன்றவற்றில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நாகூர்:

தஞ்சாவூரில் இருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் உள்ளது நாகூர். இங்கு முஸ்லிம் துறவியான ஹஸ்ரத் மீராஸ் சுல்தான் சையது ஷகாப்துல் ஹமீது தர்கா உள்ளது. நான்கு பக்கமும் அழகான நுழைவு வாசல், பிரம்மாண்மாக எழுந்து நிற்கும் மினராக்களுடன் (கோபுரங்கள்) அழகாக காட்சி அளிக்கும் இந்த தர்காவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கும் கந்தூரி விழா பிரபலமானது. முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற சமுயதாயத்தினரும் வந்து செல்லும் மதநல்லிணக்க தலமாக நாகூர் தர்கா விளங்குகிறது.

வேளாங்கண்ணி:

கிறிஸ்தவர்களின் புனித தலமாக விளங்கும் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தையும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக கூறலாம். வங்காள விரிகுடா கடற்கரையில் அழகாக எழுந்து எழுந்து நிற்கும் வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் திருவிழா பிரசித்தம். நாடுமுழுவதிலும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

பூம்புகார்:

தஞ்சாவூரில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ளது பூம்புகார். அந்தக்காலத்தில் சோழர்களின் துறைமுக நகரமாக விளங்கிய போது காவிரி பூம்பட்டினம் என அழைக்கப்பட்டது. பின்னர் கடலில் மூழ்கிவிட்ட இந்த நகரம் தற்போது எஞ்சியுள்ள பகுதியுடன் பூம்புகாராக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து

காவிரிக்கரையில் அமைந்துள்ள பகுதி என்பதால் தஞ்சாவூரில் நல்ல குடிதண்ணீருக்கும் சுவையான உணவுக்கும் பஞ்சமில்லை. தங்கும் இடங்களைப் பொறுத்தவரை நகரங்களில் தனியார் லாட்ஜ்களும் அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மற்றும் அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் உள்ளன. சென்னையில் இருந்து சாலை வழியாக சுமார் 330 கி.மீ தூரத்தில் தஞ்சாவூர் உள்ளது. ஆகாய மார்க்கமாக வந்தால் திருச்சி விமானநிலையத்திற்கு வந்திறங்கி காரில் சுமார் 50 கிமீ பயணம் செய்தால் தஞ்சையை அடைந்து விடலாம். ரயில்நிலையம் சாலை வசதிகளும் உள்ளன.

"அடடே. டைரியை புரட்டி டூருக்கு நாள் பாக்கிறீங்களா? தஞ்சாவூரை சுற்றிப்பார்த்து விட்டு இங்கு தயாராகும் பாரம்பரியமிக்க தஞ்சாவூர் தட்டுக்களையும், தஞ்சாவூர் ஓவியங்களையும் வாங்கி நீங்கள் அன்பு வைத்திருப்பவர்களுக்கு பரிசளித்தால் தஞ்சைப்பயணம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மீது அன்பு கொண்டவர்களாலும் மறக்க முடியாது".

No comments: