Tuesday, 21 October 2008

பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர்

20.10.08 பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர்
கேரள மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த பகுதி திருச்சூர். கேரளத்தின் பண்பாட்டு தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாரம்பரியப் பெருமை கொண்டது. சக்தன் தம்புரான் என அழைக்கப்பட்ட ராஜா ராம வர்மாவால் செதுக்கப்பட்ட ஊரான திருச்சூரில் ரசிக்கவும் இடங்கள் உண்டு. தரிசிக்கவும் தலங்கள் பல உண்டு.
ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்:

திருச்சூர் என்றதும் பக்தர்களிடம் ஒரு பரவசம் ஏற்படும். "என்டே குருவாயூரப்பா..." என உதடுகள் உச்சரிக்கத் தொடங்கி விடும். காரணம், திருச்சூர் அருகே குருவாயூரில் அமையப் பெற்றுள்ள பிரசித்தி பெற்ற ஷ்ரீகிருஷ்ணர் கோவில்தான். திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமையப் பெற்றுள்ள குருவாயூர் ஷ்ரீகிருஷ்ணன் கோவிலை குருபகவானும், வாயு பகவானும் நிர்மாணித்ததாக ஐதீகம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் 33.5 மீட்டர் உயரத்துக்கு தங்கத்தகடுகள் வேயப்பட்ட கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. 13 அடுக்குகளுடன் கூடிய 7 மீட்டர் உயரம் கொண்ட தீபத்தூண் ஒன்றும் பக்தர்களை கவர்ந்து வருகிறது. கோவிலின் கருவறையில் குருவாயூரப்பன் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். குருவாயூரப்பனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
சாவக்காடு பீச்:

குருவாயூரில் தரிசிக்க குருவாயூரப்பன் கோவில் என்றால் ரசித்து மகிழ சாவக்காடு பீச் எனக்கூறலாம். விரிந்து பரந்து கிடக்கிறது சாவக்காடு கடற்கரை. இங்கு 100அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இதில் ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன. சிரமம் பார்க்காமல் 145 படிகளில் ஏறிச்சென்று மேலிருந்து பார்த்தால்...இறங்கி வர மனமிருக்காது. சாம்பல் நிறத்தில் விரிந்து கிடக்கும் கடலையும், கூட்டம் கூட்டமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் தென்னைமரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே...யிருக்கலாம்.
பாலையூர் சர்ச்:

குருவாயூரில் பாலையூர் என்ற இடத்தில் அமையப்பெற்றுள்ள கத்தோலிக்க சிரியன் சர்ச் பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இது புனித தாமஸால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம். இங்கு ஆண்டு தோறும் ஜுலை மாதம் கொண்டாடப்படும் விருந்து விழாவில் பல மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
கொடுங்ஙல்லூர்:

அரபிக்கடலில் பெரியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள பகுதியான கொடுங்ஙல்லூர் மிகவும் பழமைவாய்ந்த ஒரு இடம். யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலநாட்டு வியாபாரிகள் வர்த்தகம் செய்த இடமாக கருதப்படுகிறது.
சேரமான் ஜும்மா மசூதி:

கொடுங்ஙல்லூர் பகுதியில் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் சேரமான் ஜும்மா மசூதி அமைந்துள்ளது. இது கி.பி.629ம் நிர்மாணிக்கப்பட்ட பழமையாக மசூதி ஆகும்.
சாலக்குடி:

திருவிதாங்கூர் நெடுங்கோட்டையை திப்புசுல்தான் முற்றுகையிட்டு தளம் அமைத்ததாக கூறப்படும் இடம்தான் சாலக்குடி. திருச்சூரில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைகள், மரங்கள் சூழ்ந்த பச்சைப்பசேல் பகுதி. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
அதிரப்பள்ளி அருவி:

சாலக்குடியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி அருவி. இது பெயருக்கு ஏற்றாற்போல ச்சும்மா...அதிர வைக்கும் அருவிதான். 80 அடி உயரத்தில் இருந்து பேரிரைச்சலுடன் விழும் அருவி, அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அருவி விழுவதால் புகை மண்டலமாய் எழும் சாரல், நம் மேனியை தழுவி ஜில்லிட வைக்கிறது. இந்தியாவின் நயாகரா என வர்ணிக்கப்படும் அதிரப்பள்ளி அருவியை சுட்டுத்தள்ளாத சினிமா காமிராக்கள் மிகமிகக் குறைவு. புன்னகை மன்னன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அதிரப்பள்ளி அருவி அழகுத் தாண்டவம் ஆடியிருக்கிறது.

இவை தவிர திருச்சூரில் உள்ள கேரள லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, திருப்ரயார் கோவில், திருவம்பாடி மற்றும் பாறமெக்காவு கோவில்கள், பீச்சி அணைக்கட்டு மற்றும் சரணாலயம், கதகளி நடனம் கற்றுத்தரும் செருதுருத்தி கேரள கலா மண்டலம் என திருச்சூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.
திருச்சூர் பூரம் திருவிழா:

கேரளாவின் தனிச்சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவும் ஒன்று. இங்குள்ள வடக்குநாதன் கோவிலின் முன்புறம் பூரம் திருவிழா நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கான செண்டை மேளங்கள் முழங்க, எண்ணிலடங்காத வாணவெடிகள் வர்ணஜாலம் காட்ட, அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அணிவகுத்து வர...நடைபெறும் திருவிழா வேறெங்கிலும் காண முடியாத அரிய திருவிழா. மலையாள மாதமான மேடா மாதத்தில் (ஏப்ரல்- மே) சிறப்பு மிக்க பூரம் திருவிழா நடத்தப்படுகிறது.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதிகளைப் பொறுத்தவரை திருச்சூர் பகுதியில் நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. பிற இடங்களை இணைக்கும் வகையில் ரயில் நிலையமும் திருச்சூரில் இருக்கிறது. திருச்சூருக்கு அருகே சுமார் 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளத்தில் விமான நிலையம் உள்ளது.
"திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..."

No comments: