Saturday, 11 October 2008

அந்தமானைப் பாருங்கள் அழகு

ங்கக்கடல் தனது மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கும் வனப்புமிக்க தீவுக்கூட்டம்தான் அந்தமான், நிகோபர். இவை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. வங்கக்கடலில் வடக்கில் இருந்து தெற்காக சுமார் 700 கி.மீ நீளத்துக்கு விரிந்து கிடக்கும் இந்த தீவுக்கூட்டங்களில் மொத்தம் 36தீவுகளில்தான் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற தீவுகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. இவற்றில் அரிய வகை விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் நிறையவே உண்டு. அழகு மிளிரும் அந்தமான் நிகோபர் தீவுகளில் கண்டு களிக்க நிறைய இடங்கள் உள்ளன.

அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ்:

நீர்விளையாட்டுக்களில் ஆச்சரியப்படுத்தும் வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் இங்கு உள்ளன. இவற்றில் சாதாரண நீர்சறுக்கு விளையாட்டு, சாகச நீர்சறுக்கு விளையாட்டுக்களும் உண்டு. இரண்டு வகைகளுக்கும் தனித்தனி நேரங்கள் வைத்து உள்ளனர்.
மீன் காட்சியகம்:

அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ் அருகில் மீன் காட்சியகம் அமைந்து உள்ளது. இந்திய பசிபிக் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் காணப்படும் மீன்வகைகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கண்களுக்கு மட்டும் அல்ல அறிவுக்கும் விருந்தளிக்கிறது இந்த மீன்காட்சியகம்.

பறவைத்தீவு:

தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 25கி.மீ தொலைவில் பறவைத் தீவு உள்ளது. மாங்குரோவ் காடுகளும், மனதைக் கவரும் கடற்கரையும் இதன் சிறப்பம்சம். இங்கு ஒரு மலைக்குன்றின் மீது வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கிருந்து பறவைத்தீவின் மொத்த அழகையும் காண முடியும்.
சயின்ஸ் சென்டர்:

போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த அறிவியல் மையத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் எப்படி உருவாயின என்பதைப் பற்றியும் அவற்றின் அறிவியல் பூர்வமான உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். புகைப்படங்கள், மாதிரிகள் என நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன.
நிகோபர்:

1841 சதுர அடி பரப்பளவில் 28 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமே நிகோபர் என அழைக்கப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் இந்தத் தீவுகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. நீண்ட வால் கொண்ட குரங்குகள், அரிய வகை புறாக்களை இங்கு காணலாம். இதே போல 28 தீவுக்கூட்டங்களைக் கொண்ட கார்நிகோபர் தீவும் பல சிறப்புத்தன்மைகளைக் கொண்டது.
அந்தமான் சிறைச்சாலை:

இந்திய சுதந்திரபோராட்டத்துக்கும் அந்தமான் சிறைச்சாலைக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டு விலங்குகளைப்போல சித்ரவதை செய்யப்பட்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் ஏராளமானோர் இங்கு 20ஆண்டுளுக்கு மேலாக தங்களது வாழ்நாளை தனிமைச் சிறையில் கழித்து இருக்கிறார்கள்: போர்ட் பிளேயரில் பிரம்மாண்டமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கும் இந்த சிறைச்சாலை, நாம் சுதந்திரமாக இருப்பதற்காக நம் முன்னோர்கள் இங்கு அனுபவித்த கொடுமையை நினைவு படுத்தி வருகிறது.
இவை தவிர அந்தமான் மற்றும் நிகோபரில் பாரஸ்ட் மியூசியம், மகாத்மா காந்தி மெரைன் நேஷனல் பார்க், மவுண்ட் ஹாரியட், ரோஸ் ஐலண்ட், விப்பர் ஐலண்ட், கிரேட் நிகோபர் என பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அந்தமான் நிகோபர் நிர்வாகம் சார்பில் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் தீவு சுற்றுலா விழா (ஐலண்ட் டூரிசம் பெஸ்டிவல்) இங்கு பிரபலம். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பங்கேற்க வருகிறார்கள்.

சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. மேலும் சென்னை, கொல்கத்தாவில் இருந்து விமானங்களும் இயக்கப்படுகின்றன.

"அழகு மிளிரும் அந்தமானை ரசித்து வர இப்பவே யோசிக்கத்தொடங்கிட்டீங்களா,,?"

அழகு, அமைதி தவழும் புதுச்சேரி


ந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும் இருந்து வருகிறது. புதுச்சேரியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்:

நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

ஆரோவில்:

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ்நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அரிக்கமேடு:

பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி.600ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத்தகுந்தவை.

புதுச்சேரியின் அமைதியான கடற்கரை ரோட்டில் காலாற நடந்து சென்று கடல் அழகை ரசிப்பதும், அமைதியை அனுபவிப்பதும் புதிய அனுபவம்தான். வார இறுதி நாட்களில் புதுச்சேரி கடற்கரை ரோட்டில் மக்கள் தலைகளாகத்தான் தென்படும்.

காரைக்காலிலும் பார்க்க பல இடங்கள் உள்ளன. காரைக்கால் அம்மையார் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் தர்கா, சர்ச் ஆப் அவர் லேடி ஏஞ்சல்ஸ் போன்றவை சென்று வரவேண்டிய இடங்கள்.

இது தவிர புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆளுகைக்கு உட்பட்ட எழில் கொஞ்சும் மாஹே, ஏனாம் பகுதிகளிலும் பார்க்கத்தகுந்த இடங்கள் உள்ளன. புதுச்சேரியில் இருந்து மாஹே 647 கி.மீ தொலைவில் கேரளப் பகுதியிலும், ஏனாம் 870 கி.மீ தொலைவில் ஆந்திரப்பகுதியிலும் அமைந்து உள்ளன.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு, தங்குமிடங்களைப் பொறுத்தவரை புதுச்சேரியில் ஒரு பிரச்னையே அல்ல. தரமான உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் புதுச்சேரி உள்ளது. அருமையான சாலை வசதி இருக்கிறது. விமான நிலையத்தை பொறுத்த வரை சென்னைதான் அருகில் உள்ள விமானநிலையம் ஆகும். திருச்சி 220 கி.மீ தொலைவிலும் பெங்களூர் 320 கி.மீ தொலைவிலும் உள்ளது.

"அழகை ரசிப்பவர்களுக்கு, அமைதியை விரும்புபவர்களுக்கு புதுச்சேரி நல்ல இடம். புதுச்சேரிக்கு சென்று வருவது ஒரு புதுமை அனுபவமாக இருக்கும்"

இயற்கையோடு பழகி வர தேக்கடி

மிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ்.

வனவிலங்கு சரணாலயம்:

எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிவதை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் கண்களில் தென்படலாம். இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெரியாற்றில் இந்த காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசிப்பது த்ரில் கலந்த புதுமையான அனுபவமாக இருக்கும். பெரியாற்றில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது.

யானை சவாரி:

யானை மீதேறி சவாரி செய்வது பெரியவர்களைக் கூட குழந்தைகள் போல குஷிப்படுத்தி விடும். இதை தேக்கடியில் நேரில் காணலாம். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு அரை மணிநேரம் என்ற கணக்கில் இங்கு யானை சவாரி நடத்தப்படுகிறது.

குமுளி:

தேக்கடி காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் குமுளி. இந்தப்பகுதியின் ஷாப்பிங் சென்டராக திகழ்ந்து வருகிறது. காட்டில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை இங்கே விற்பனை செய்கிறார்கள்.

மங்களாதேவி கோவில்:

மிகப்பழமையான மங்களா தேவி கோவில் தேக்கடியில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கேரளத்தின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1337மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் பகுதியில் இருந்து பார்த்தால் காட்டின் அழகை கண்குளிர ரசிக்கலாம்.

முல்லைப் பெரியாறு அணை:

தமிழக- கேரள அரசியலில் அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்குதான் அமைந்துள்ளது. ஆங்கிலேயரால் 1895ம் ஆண்டில் பெரியாற்றின் இந்த அணை கட்டப்பட்டது. கேரளப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.

இதே போல தேக்கடியில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பச்சை வெல்வெட் துணியை போர்த்தியதைப் போல புற்களால் போர்த்தப்பட்டிருக்கும் புல்லுமேடு, டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்தவையே. தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் ட்ரெக்கிங்கும் பிரபலம்.

இயற்கையுடன் சில நாட்கள் இணைந்திருக்க நினைப்பவர்கள் தேக்கடியை தேர்ந்தெடுக்கலாம்

ஆசியாவின் வெனிஸ் ஆலப்புழா

கேரளாவில் நீர்வளம் நிறைந்த மாவட்டம் ஆழப்புழா. இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரும் நீர்வளம் நிறைந்ததுதான். வெனிஸ் நகரில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு செல்வதானால் கூட படகில்தான் செல்ல வேண்டும். அதுபோலத்தான் ஆழப்புழாவும். வீட்டை விட்டு ஸ்கூல், காலேஜ், ஷாப்பிங் செல்லவேண்டும் என்றால் பெரும்பாலும் படகில்தான் செல்ல வேண்டும். பால், பேப்பர் போன்ற தினசரி சமாச்சாரங்கள் வருவதும் படகுவழிதான். இதனாலேயே ஆசியாவின் வெனிஸ் என ஆழப்புழா அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேற்கே...அலைகளை ஆடையாக தவழ விட்டபடி அழகாக புரண்டு கொண்டிருக்கும் அரபிக்கடல். ஊருக்குள் வெள்ளியை உருக்கி விட்டாற்போல ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏரிகள். நன்னீர் ஆறுகள். உப்பங்கழிகள். இதுதான் ஆழப்புழா. இங்கு நடைபெறும் பாம்புப்படகுப் போட்டி உலக அளவில் புகழ் பெற்றது. படகுச்சுற்றுலாவும் பிரபலம். அழகான ஆலப்புழா மாவட்டம்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் டூரிஸ்ட் ஸ்பாட்.

அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில்:

ஆலப்புழாவில் இருந்து சுமார் 15கி.மீ தொலைவில் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் உட்புறச்சுவர்களில் வரையப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் காண்போரை ஆச்சரியப்படுத்தும். இங்கு பள்ளிபாணா என்ற பெயரில் ஒரு மாயமந்திரக்கலை நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த மாயமந்திரக்கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கதிகலங்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பிரசாதமாக பால்பாயசம் வழங்கப்படுகிறது. இதன் சுவை, பக்தர்களின் நாவைச் சுழற்றச் செய்யும்.

காயங்குளம் கிருஷ்ணாபுரம் அரண்மனை:

மார்த்தாண்ட வர்ம மன்னனால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆழப்புழாவில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கீழ்த்தளத்தில் காணப்படும் கஜேந்திர மோட்சம் சுவரோவியம் ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், வெண்கலச் சிற்பங்கள் அரண்மனையின் வரலாற்றை உணர்த்துகின்றன.

சக்குலத் பகவதி கோவில்:

அம்பலப்புழா நீராட்டுபுரத்தில் சக்குலத் பகவதி கோவில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கடவுள்களையும் தோற்றுவித்த மகாசக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள். இங்கு நடக்கும் பொங்கல் மகா உத்சவ விழா பிரசித்தம். இதில் நாடு முழுவதிலும் இருந்து பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகிறார்கள்.

எடத்துவா சர்ச்:

ஆழப்புழாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சர்ச் 1810ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். ஐரோப்பாவின் மத்திய கால கோதிக் கலைப்பாணியில் இந்த சர்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து மனம் ஒன்றிப் பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலும் இருந்து இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.

குட்டநாடு:

கேரளத்தின் அமுதசுரபியாக (நெற்களஞ்சியமாக) குட்டநாடு விளங்கி வருகிறது. இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேல் நெல் வயல்வெளிகள்தான். இதுதவிர வாழை, வள்ளிக்கிழங்கு, கொடிவள்ளிக்கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிடுகின்றனர். குட்டநாடு கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டருக்கு கீழே அமைந்துள்ளது. இருந்தபோதிலும் இங்கு விவசாயம் செழிப்பாக நடப்பது ஆச்சரியம் என்கிறார்கள்.

இவை தவிர அர்த்துங்கல் புனித செபாஸ்டியான் சர்ச், ஆலப்புழா கடற்கரை, கருமாடிக்குட்டனில் உள்ள புத்தர் சிலை, குன்னத்துமலை மகாதேவன் கோவில், சவரா பவன், சம்பங்குளம் சர்ச், பதிரா மணல், வரலாற்றில் இடம் பெற்றுள்ள புன்னப்பரா கிராமம் உள்ளிட்ட பல இடங்கள் ஆலப்புழா மாவட்டத்தில் பார்க்கத்தகுந்தவை. மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகுச் சுற்றுலாவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு படகுச்சுற்றுலா அலுவலகத்தில் முன்னரே பதிவு செய்தல் வேண்டும்.

பாம்புப் படகுப்போட்டி:

ஆலப்புழாவில் பலவிதமான படகுப்போட்டிகள் நடத்தப்படுகிறது என்றாலும் இவற்றில் புகழ் பெற்றது ஜுலை மாதத்தில் நடத்தப்படும் சுண்டன்வள்ளம் பாம்புப்படகு போட்டிதான். மிக நீளமான படகை ஏராளமானோர் ஒரே நேரத்தில் துடுப்புபோட்டு அசுர வேகத்தில் செலுத்துவார்கள். பரவசப்படுத்தும் இந்த சுண்டன்வள்ளம் படகுப்போட்டியை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

ஆலப்புழா மாவட்டத்தில் உணவு வகைகளைப் பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கிறது. தங்குவதற்கு சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. அசைவப் பிரியர்கள் விதவிதமான மீன்களை ருசிக்கலாம். ஆழப்புழா மீன்களின் சுவை அத்தனை சீக்கிரம் நாவை விட்டு அகன்று விடாது. போக்குவரத்தைப் பொறுத்தவரை ஆழப்புழாவில் ரயில் நிலையம் உள்ளது. பிற பகுதிகளில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80கி.மீ தொலைவில் கொச்சினில் விமான நிலையம் அமைந்துள்ளது. கொச்சினில் இருந்து ஆழப்புழாவுக்கு நல்ல சாலை வசதியும் இருக்கிறது. சாலை மார்க்கமாக சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆழப்புழாவை தொட்டு விடலாம்.

"பரந்து கிடக்கும் தண்ணீர். பரவிக்கிடக்கும் அழகு. பார்க்கும் இடங்களிளெல்லாம் படகு. இதையெல்லாம் மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும்?"

இயற்கை ஆட்சி செய்யும் வயநாடு


கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான் இந்த வார நமது டூரிஸ்ட் ஸ்பாட்.

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.
பேகர் வனவிலங்கு சரணாலயம்:
மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல மானந்தவாடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும் பல வகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும். அரிய வகைத் தாவரங்களும் இங்கு உண்டு. இயற்கை விரும்பிகளுக்கு இவை மறக்க முடியாத இடங்களாகும்.
செம்ப்ரா உச்சி:

கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ரா மலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.
கரலாட் லேக்:

கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.
சிப்பாரா அருவி:

வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது.
மீன்முட்டி அருவி:

சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி, ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.
இருளம் சீதாதேவி கோவில்:

சுல்தான் பத்தேரியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இருளம் சீதாதேவி கோவில் உள்ளது. சீதைக்கும் அவரது மகன்கள் லவ-குசாவுக்காகவும் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
.
குருவா தீவு:

இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு, கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:

சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.

இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
கேம்ப் பயர், மரவீடுகள்:

இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக, நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி, காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹாய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.
"இயற்கை ஆட்சி செய்யும் நாடு, வயநாடு. இங்கு சென்று வர யாருக்குத்தான் மனம் வராது?"

ரசிக்க, தரிசிக்க திருவனந்தபுரம்

டவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்தான் இந்த வார ஸ்பெஷல் டூரிஸ்ட் ஸ்பாட். காரணம் இது மகாபலிராஜா விசிட் செய்யும் ஓணம் வாரமல்லோ!. ஓ.கே. இனி ஓவர் டூ திருவனந்தபுரம். பத்மநாபசுவாமி (விஷ்ணு) அனந்த சயனத்தில் இங்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பதால் இந்த ஊர் திருவ(அ)னந்தபுரம் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.. திருவனந்தபுரத்தில் தரிசிக்கவும், ரசித்து மகிழவும் நிறைய இடங்கள் உள்ளன.
பத்மநாபசுவாமி கோவில்:

அரபிக்கடலோரம்... அந்த அரபிக்கடலை மேற்குப் பகுதியாகவும், தமிழ்நாட்டை கிழக்குப் பகுதியாகவும் கொண்ட நிலப்பகுதிதான் திருவனந்தபுரம். ஏழு சிறிய குன்றுகளின் மீது எழுந்து நிற்கும் அழகான நகரம். 1750ம் ஆண்டு வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் நாட்டின் விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகரமாக தொடருவது சிறப்பாகும்.

இங்குள்ள அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோவிலை 1733ம் ஆண்டில் திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா சீரமைத்தார். கேரளாவின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இந்தக் கோவில் விளங்கி வருகிறது. இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் போன்றவை நம் முன்னோர்களின் திறமையை இன்றளவும் முரசடித்து வருகின்றன. தரிசிக்க மட்டுமின்றி பார்த்து பரசவப்படவும் வைக்கிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன்கோவில்:

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் அதிகளவில் வந்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 17 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
பொன்முடி:

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளுகுளு மலைப்பகுதிதான் பொன்முடி. நம்ம ஊர் ஊட்டி போல இங்கு எப்போதும் ஜிலுஜிலு குளுகுளு காற்றுதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 915 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள பொன்முடி மலைப்பகுதியில் அரியவகை மலர்களையும், படபடத்துச் செல்லும் விதவிதமான வண்ணத்துப் பூச்சி ரகங்களையும் கண்டு களிக்கலாம். பச்சைப் பசேல் தேயிலைத்தோட்டங்களை தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள் நம் உடலை மட்டுமல்ல கண்களையும் குளுமையாக்கும். இங்கு சுமார் 3 கி.மீ தொலைவில் மான்பூங்கா ஒன்றும் உள்ளது.

பொன்முடியில் இருந்து சிறிது தொலைவில் அழகான அருவி ஒன்றும் விழுந்து கொண்டிருக்கிறது. இங்கு அகஸ்தியர் கோவில் ஒன்றும் உள்ளது. பவுர்ணமி நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
நெய்யாறு அணை:

அழகு சிந்தும் பிக்னிக் ஸ்பாட்டாக விளங்கும் நெய்யாறு அணை, திருவனந்தபுரத்தில் இருந்து சமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் கள்ளிக்காடு புலிகள் சரணாலயப் பகுதி மற்றும் தமிழகத்தின் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயப் பகுதியின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ளது. அணையில் படகு சவாரி உண்டு. முதலைப்பண்ணை ஒன்றும் இருக்கிறது.
கோவளம் பீச்:

இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான கோவளம் பீச், திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அசைந்தாடும் தென்னை மரக்கூட்டங்கள், அழகான அரபிக்கடல் ஆகியவற்றை ரசித்துக் கொண்டு கடற்கரையில்... வெண்மணலில் கால்பதித்து நடைபோடுவதே தனிசுகம்தான். இதனாலேயே கோவளத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் சுற்றுலா பயணிகள் ஏராளம்.
சங்குமுகம் பீச்:

இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சங்குமுகம் பீச்சும் பிரபலம். இதன் அருகிலேயே திருவனந்தபுரம் விமானநிலையமும் அமைந்துள்ளது சிறப்பு. சங்குமுகம் பீச்சுக்கு சூரியன் மறையும் காட்சியை ரசிப்பதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர்.
வர்க்கலா பீச்:

திருவனந்தபுரத்தில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது வர்க்கலா பீச். இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஜனார்த்தனசுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

இவற்றைப்போல கேரளாவின் 2வது பெரிய சிகரமான அகஸ்தியர் கூடம், ஆங்கிலேயர் தங்களது வாணிபத்துக்காக மலபார் பகுதியில் முதல் முறையாக கட்டிய அஞ்சுன்தெங்கு கோட்டை என பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் நீளுகிறது.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து

உணவு வசதியைப் பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் அனைத்து வகை உணவு வகைகளும் கிடைக்கின்றன. தரமான நல்ல உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரத்துக்கு ரயில் வசதி உள்ளது. சர்வதேச விமான நிலையமும் இங்கு உள்ளது.
"ஓ.கே திருவனந்தபுரத்துக்கு நிங்கள் விசிட் எப்போ?"

பரவசப்படுத்தும் பாலக்காடு

காற்றின் தழுவலால் களிப்புற்று கதகளி ஆடிக் கொண்டிருக்கும் நெற்கதிர்கள், முகில்களை முத்தமிடப்போவது நீயா? நானா? என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நெடிதுயர்ந்த பாக்குமரங்கள் என இயற்கை அழகு பின்னிப் பிணைந்த பச்சைப்பசேல் மாவட்டம், கேரளாவின் பாலக்காடு மாவட்டம். கோயம்புத்தூரையொட்டி தமிழக- கேரள எல்லையில் அமையப் பெற்றுள்ள பாலக்காடு, கேரளாவின் தலைவாசல் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இருப்பதால், பாலக்காட்டின் தட்பவெப்ப நிலை பெரும்பாலும் ஜிலுஜிலு தான். பாலக்காட்டில் பார்த்து பரவசப்பட நிறைய இடங்கள் உள்ளன.
அட்டப்பாடி:

அலற வைக்கும் அடர்ந்த காடுகள், சலசலத்து ஓடும் ஆறுகள், மலைக்க வைக்கும் மலைக்குன்றுகள் என இயற்கை விரும்பிகளை சொக்க வைக்கும் வனப்பகுதிதான் அட்டப்பாடி வனப்பகுதி. பாலக்காடு அருகே மன்னார்காட்டில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. ஏராளமான ஆதிவாசி இனத்தவர்களும் அட்டப்பாடி வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மல்லேஸ்வரன் மலை உச்சியை பெரிய சிவலிங்கமாக கருதி இந்த மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இயற்கையுடன் இணைந்திருக்க விரும்புவோரும், ஆதிவாசி மக்களை அறிந்து வர விரும்புவோரும் அட்டப்பாடியை தேர்வு செய்யலாம்.
அமைதிப் பள்ளத்தாக்கு:

மன்னார்காட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இங்கு நடமாடும் வனவிலங்குகளுக்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக முக்காலி என்ற இடம் வரை மட்டுமே வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு காட்டுக்குள் நடைபயணம்தான். முக்காலியில் இருந்து சுமார் 25 கி.மீ நடந்து சென்றால் அழகான குந்திப்புழா அருவி வரவேற்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நடைபயணம் மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்து வருவது வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
ஏமூர் பகவதி கோவில்:

பாலக்காடு அருகே ஒலவக்கோடு சந்திப்புக்கு அடுத்து ஏமூர் பகவதி கோவில் உள்ளது. இந்த அம்மனைப் பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு துறவிக்கு காட்சி தர சம்மதித்த அம்மன், அப்போது வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறாள். ஆனால் காட்சி தருவதற்காக அம்மன் கண்விழித்த போது அங்கு ஏராளமானோர் இருக்கவே அம்மன் மறைந்து விட்டாளாம். அம்மனின் மேலெழுந்து வரும் கையை மட்டுமே அங்கு கூடியிருந்த பக்தர்கள் பார்க்க முடிந்ததாம். அதன்படி அம்மனின் கை மட்டுமே இங்கு வழிபாட்டுக்கு உரியதாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்மனை காலையில் சரஸ்வதியாகவும், மதியம் லட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
குமாரபுரம் கோவில்:

பாரதப்புழா ஆற்றங்கரையில் உள்ள குமாரபுரம் கோவிலில் வெங்கடாஜலபதி தனது மனைவியர் அலமேலு, மங்கம்மாள் ஆகியோருடன் எழுந்தருளி உள்ளார். இங்குள்ள வெங்கடாஜலபதி திருப்பதிக்கு இணையானவராக பக்தர்களால் போற்றப்படுகிறார். இதனால் திருப்பதி கோவிலில் நடத்தப்படுவதைப் போலவே இங்கும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
கோட்டாயி:

இந்த கோட்டாயி கிராமம், புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் வாழ்ந்த அழகிய கிராமம் ஆகும். பாலக்காடு- புதூர் பாதையில் உள்ளது.
சிறுவாணி அணை:

பாலக்காட்டில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் சிறுவாணி அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்துதான் கோவை மக்களுக்கு சிறுவாணி நீர் வழங்கப்படுகிறது. கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி அணைக்கட்டுப் பகுதி, பார்க்கவேண்டிய இடம். இங்கு பல்வேறு ஆதிவாசி மக்களும் வசித்து வருகின்றனர்.
மலம்புழா அணை:

பாலக்காட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மலம்புழா அணையும், அணையையொட்டி உள்ள தோட்டமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள், மனதைக் கொள்ளை கொள்ளும் மலர்பூங்காக்கள், செயற்கை நீரூற்றுக்கள் என இயற்கை காட்டும் ஜாலங்கள், மலம்புழா தோட்டத்தில் நம்மை மலைக்க வைக்கின்றன.
பலவகை ரோஜாக்கள் நிறைந்த ரோஜாப்பூங்கா ஒன்றும் இங்கு உள்ளது. மலம்புழா தோட்டத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் ஜொலிப்பது கொள்ளை அழகு. சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மட்டுமே விளக்குகளின் வர்ண ஜாலத்தை கண்டு ரசிக்க முடியும். மற்ற நாட்களில் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்து குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும் பட்சத்தில் தோட்டத்தின் விளக்குகள் ஒளியூட்டப்படுகின்றன.

இவை தவிர ஒற்றப்பாலம், கல்பாத்தி சிவன் கோவில், கொல்லங்கோடு, திப்பு கோட்டை, மீன்கரா அணைக்கட்டு என பாலக்காடு பகுதியில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதியைப் பொறுத்தவரை பாலக்காட்டில் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. பாலக்காட்டுக்கு நல்ல சாலை வசதி உள்ளது. ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை, தென்னக ரயில்வேயில் பாலக்காடு தனி டிவிஷனாக இருந்து வருவதால் பிற பகுதிகளில் இருந்து பாலக்காட்டுக்கு ரயில்வசதி தாராளமாகவே உள்ளது பாலக்காட்டுக்கு அருகில் சுமார் 100 கி.மீ தொலைவில் கேரளாவின் கொச்சின் விமான நிலையம் உள்ளது. அதைவிட தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமானநிலையம் பாலக்காட்டில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவுதான். சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தின் மூலம் பாலக்காட்டை தொட்டு விடலாம்.

"பாலக்காடு..! பரவசப்படுத்தும் அழகான சுற்றுலாத் தலம்"